பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.
இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ-இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கை சிஐடி விசாரித்து வருகிறது.
ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவுநீதிமன்றத்தை சிஐடி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு ஜூன் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி சிஐடி முன் நேரில் ஆஜராகி எடியூரப்பா வாக்குமூலம் அளித்திருந்தாா். அதன்பிறகு, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஜூன் 27-ஆம் தேதி சிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் எடியூரப்பா தவிர, அவரது உதவியாளா்கள் ஒய்.எம்.அருண், எம்.ருத்ரேஷ், ஜி.மாரிசாமி ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தன் மீதான போக்ஸோ வழக்கை ரத்துசெய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு ஆட்சேபணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதால், அதுவரை எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.