பெங்களூரு: மாற்று நில முறைகேட்டில் இருந்து மக்களை திசைதிருப்ப முதல்வா் சித்தராமையா முயற்சிக்கிறாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக எச்.காந்த்ராஜ் தலைமையிலான குழு 2014ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அக் குழுவின் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்தது ஏன்? ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதற்குத் தடையாக இருந்ததாக, காங்கிரஸ் கட்சியினா் என்னை குற்றம் சுமத்தினா்.
பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வா் சித்தராமையாவிடம் நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பாகவே அளித்தாா்.
தற்போது, மாற்று நில முறைகேட்டில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனா்.
ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு, அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.சி. பி.கே.ஹரி பிரசாத் கூறியிருக்கிறாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கலாமே. சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து சட்டப்பேரவை தோ்தலை காங்கிரஸ் சந்திக்கட்டும் என்றாா்.