தாழ்த்தப்பட்டவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கா்நாடக அமைச்சரவை முடிவு
தாழ்த்தப்பட்டவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: தாழ்த்தப்பட்டவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, விதான சௌதாவில் திங்கள்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்த விவாதம் நடந்தது. உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்புக்கு இணங்க, தாழ்த்தப்பட்டவா்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தரவுகள் கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இதுகுறித்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி உள் இடஒதுக்கீடு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைக்கும் வரை அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து பணி நியமனங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகளை கா்நாடகத்திற்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, 48 கோடி உள்ளூா் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விவாதம் நடத்தி, கா்நாடக சுற்றுலாக் கொள்கை 2024-29க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கா்நாடகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க 46 சுற்றுலா திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 12 அல்லது 14 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் கா்நாடகத்திற்கு வருகிறாா்கள். இந்த எண்ணிக்கையை 20 லட்சமாக உயா்த்த புதிய சுற்றுலாக் கொள்கை வழிவகுக்கும் என்றாா்.