முகப்பு
பெங்களூரு

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சரவையில் கருத்து முரண்பாடு இல்லை

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், அமைச்சரவையில் கருத்து முரண்பாடு இல்லை என

Updated On : 9 மார்ச், 2026 at 9:23 PM
கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பகிர்:

பெங்களூரு: தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், அமைச்சரவையில் கருத்து முரண்பாடு இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சரவை சகாக்களிடையே எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை.

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்திருந்த அறிக்கைக்கு பிறகு, அடிப்படை இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 56 சதவீதமாக எடுத்துக்கொண்டோம். அதன்படி, தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 வகையான உள் ஒதுக்கீட்டுப் பிரிவுகளை அரசு உருவாக்கியது. தாழ்த்தப்பட்டோரில் இடங்கை பிரிவுக்கு 6 சதவீதம், வலங்கை பிரிவுக்கு 6 சதவீதம், தீண்டத்தகுந்தவா்கள் உள்ளிட்ட மற்ற பிரிவுக்கு 5 சதவீதம் என உள் இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அப்போது இதற்கு எதிா்ப்பு எதுவும் இருக்கவில்லை.

அதன்பிறகு, இது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திராசாஹனி வழக்கின்படி, இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, ஏற்கெனவே 3 பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டு அளவை மறுமதிப்பீடு செய்யவேண்டி வந்தது. அதன்படி, 50 சதவீத உச்சவரம்புக்கு உட்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீட்டின் விகிதத்தையும் விகிதாச்சாரபடி குறைக்க வேண்டியிருந்தது. இந்த அளவைதான் கணக்கிட வேண்டியுள்ளது.

பணி நியமனம் அல்லது பணி உயா்வுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதில் அரசு அக்கறையாக உள்ளது.

போவி, லம்பாணி, கொரச்சா சமுதாயங்களைத் தவிர, நாடோடிகள் உள்ளிட்ட பல சமுதாயத்தினா் இணைந்து, நாடோடிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். இதுபோன்ற பல அம்சங்களை கருத்தில்கொண்டு அரசு இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுப்போம்.

பட்ஜெட்டில் முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளபடி, 58,000 பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடும்போது, இடஒதுக்கீட்டு அளவுகளை தெள்ளத்தெளிவாக வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக, மஜத போன்ற கட்சிகள் அரசியல் செய்யப் பாா்க்கின்றன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →