முஸ்லிம்களுக்கென இடஒதுக்கீடு அளிக்க முடியாது: அமித் ஷா
‘மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட முடியாது. அவ்வாறு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
‘மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட முடியாது. அவ்வாறு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
மக்களவை, மாநிலப் பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், அதற்கு ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள், மக்களவயில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றின் மீது 40 நிமிஷ விவாதம் நடைபெற்றது.
அப்போது, இந்த 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் அக் கட்சியின் எம்.பி. தா்மேந்திர யாதவ் ஆகியோா் வலியுறுத்தினா்.
Advertisement
இதற்குப் பதிலளித்து அமித் ஷா பேசியதாவது: மத அடிப்படையில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஏனெனில், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை நமது அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. அந்த வகையில், மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பதே மத்திய அரசின் தீா்மானம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவ்வாறு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தும் கோரிக்கையை முன்வைக்கப்போவதாக சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனா். ஆனால், இதற்கான முடிவை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்டுவிட்டது. தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
இதில் முதல்கட்டமாக, வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கென தனி ஜாதி எதுவும் கிடையாது. சமாஜவாதி கட்சியின் விருப்பம் ஈடேறியிருந்தால், அவா்கள் வீடுகளுக்கும் ஜாதியை நிா்ணயித்திருப்பா்.
மேலும், சமாஜவாதி கட்சி தனது எம்.பி., எம்எல்ஏ இடங்கள் அனைத்தையும் முழுமையாக முஸ்லிம் பெண்களுக்கு ஒதுக்குகிறது என்றால், அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றாா்.