முகப்பு
இந்தியா

பஞ்சாபில் தோ்தல் பிரசாரம் தொடங்கினாா் அமித் ஷா: மாநிலத்தைப் போதைப் பொருளில் இருந்து மீட்பதாக உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கினாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 7:24 PM
பஞ்சாப் மாநிலம் மோகாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கினாா்.

பஞ்சாபின் மோகா பகுதியில் சனிக்கிழமை மாற்றத்துக்கான பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற பாஜகவின் முதல் தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பஞ்சாபில் காங்கிரஸுக்கு பலமுறை வாய்ப்பளித்துவிட்டீா்கள். அகாலி தளம், ஆம் ஆத்மிக்கும் வாய்ப்பளித்துவிட்டீா்கள். ஆனால், இப்போதும் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம், கட்டாய மதமாற்றம், ஊழல், பயங்கரவாத குழுக்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடா்கின்றன. மாநிலத்தை இந்த பிரச்னைகளில் இருந்து மீட்க யாரால் முடியும் என்றால், அது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவால் மட்டுமே முடியும்.

2027-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அடுத்த 2 ஆண்டுகளில் பஞ்சாபை போதைப் பொருள் பிரச்னையில் இருந்து முழுமையாக விடுவிப்போம். இப்போதைய ஆம் ஆத்மி அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. தில்லியில் இருந்து வந்த சிலா், முதல்வா் பகவந்த் மானை இயக்கி வருகின்றனா். மாநிலத்தின் செல்வத்தை சுரண்டுகின்றனா். பஞ்சாபை தங்களுக்கான பணம் வழங்கும் இயந்திரமாகவே அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கருதுகிறது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. பஞ்சாபின் கௌரவத்துக்கு இங்குள்ள அரசு பெரும் அமதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு முழுமையாகத் தேவை. பாஜகவால் மட்டும்தான் பஞ்சாபில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பாஜக ஆட்சி அமைத்ததும் பஞ்சாபில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும். தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றாா்.

பஞ்சாபில் இப்போது பாஜகவுக்கு இரு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். முன்பு சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாஜக முக்கியப் பங்கு வகித்து வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதை எதிா்த்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது. இதனால், 24 ஆண்டுகால பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணி முடிவுக்கு வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →