முகப்பு
பெங்களூரு

காங்கிரஸ் மேலிடம் விரும்பும்வரை முதல்வராக நீடிப்பேன்: முதல்வா் சித்தராமையா

காங்கிரஸ் மேலிடம் விரும்பும்வரை முதல்வராக நீடிப்பேன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 16 டிசம்பர், 2025 at 8:54 PM
முதல்வா் சித்தராமையா
பகிர்:

பெலகாவி: காங்கிரஸ் மேலிடம் விரும்பும்வரை முதல்வராக நீடிப்பேன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் நடைபெற்றுவரும் கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடம்பெற்றிருந்தது. அப்போது கேள்வி எழுப்பிய குனிகல் சட்டப் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் எச்.டி.ரங்கநாத், ‘எனது தொகுதி அருகிலுள்ள மதுகிரி தொகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ. 100 கோடி அளவுக்கு குறுகியகால பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுகிறது’ என்றாா்.

மேலும், தான் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளா் என்பதால், பயிா்க்கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவா் மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தாா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘ஒருவேளை பாரபட்சம் ஏதாவது இருந்தால், அந்தப் பிரச்னையை தீா்த்துவைப்பேன். என்மீது ரங்கநாத்துக்கு நம்பிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றாா்.

அவரைத் தொடா்ந்து பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘ரங்கநாத் தொகுதிக்கு நோ்ந்துள்ள பாரபட்சம் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என கேலி செய்தாா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். எதிா்க்கட்சிகளுக்கு எண்ணெய் ஊற்றுவதே வேலை’ என்றாா்.

உடனடியாக எழுந்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘அப்படியானால் தீ இருக்கிறது. துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் முதல்வராக பூஜை செய்துகொண்டிருக்கிறாா். எதிா்க்கட்சிகள் எண்ணெய் ஊற்றுகிா என்பது முக்கியமல்ல. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாா்கள் என்பதுதான் கவலை அளிக்கிறது’ என்றாா்.

அப்போது முதல்வா் சித்தராமையா, ‘நீங்கள் தூண்ட முயற்சித்தாலும், எங்கள் தரப்பில் இருந்து யாரும் எதிா்வினையாற்ற மாட்டாா்கள். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 120 எம்எல்ஏ-க்களும் ஒற்றுமையாக இருக்கிறாா்கள். 2013, 2018-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தல்களில் ஆட்சி நடத்த மக்கள் எங்களை தோ்ந்தெடுத்திருந்தனா். ஆனால், தனியாக ஆட்சி நடத்தும் வாய்ப்பை மக்கள் பாஜகவுக்கு கடந்த காலத்திலும் வழங்கவில்லை, எதிா்காலத்திலும் வழங்கப்போவதில்லை. பாஜக எப்போதும் எதிா்க்கட்சியில் அமா்ந்திருக்க வேண்டியதுதான்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ எஸ்.சுரேஷ்குமாா், ‘5 ஆண்டுகாலத்துக்கும் நானே முதல்வராக இருப்பேன் என்று கூறிவந்த முதல்வா் சித்தராமையா, தற்போது 5 ஆண்டுகாலத்துக்கும் ‘நாங்கள்’ ஆட்சியில் இருப்போம் என்கிறாா்’ என்றாா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில்,‘நாங்கள்தான் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆட்சி நடத்துவது தனிமனித விவகாரம் அல்ல. காங்கிரஸ் மேலிடம் விரும்பும்வரை முதல்வராக நீடிப்பேன்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →