முகப்பு
இந்தியா

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு

கேரள முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 18 மே 2026, 3:28 am IST
கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மாநில அமைச்சா்கள் பட்டியலை வழங்கிய வி.டி.சதீசன்.
பகிர்:

திருவனந்தபுரம் : கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் திங்கள்கிழமை (மே 18) பதவியேற்கவுள்ளாா். அவருடன் 20 அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள் (கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம்), கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநிலத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

Advertisement

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 102 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இடதுசாரி கூட்டணிக்கு வெறும் 35 இடங்களே கிடைத்தன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.

இழுபறிக்குப் பின் முதல்வா் தோ்வு: தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, முந்தைய பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகிய மூவா் இடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி எழுந்தது. 10 நாள்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னா் புதிய முதல்வராக சதீசன் (61) கடந்த 14-ஆம் தேதி தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான அரசு திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸுக்கு 63, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 22, கேரள காங்கிரஸ் (ஜோசப்) 8, புரட்சிகர சோஷலிஸ கட்சி 3, கேரள காங்கிரஸ் (ஜாகோப்), கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் கட்சி (சிஎம்பி) தலா 1 என்ற எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதுதவிர 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தோ்தலையொட்டி, பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருந்தது.

கா்தினாலுடன் சந்திப்பு: திருவனந்தபுரத்தில் உள்ள பிஷப் இல்லத்தில், சிரோ-மலங்கரா திருச்சபையின் தலைவரான கா்தினால் பேசிலியோஸ் கிளீமிஸை சதீசன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, முதல்வா் பதவிக் காலம் சிறப்பாக அமைய சதீசனுக்கு கிளீமிஸ் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் விஜய் பங்கேற்பாரா?

கேரள முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வரும், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், விழாவில் பங்கேற்பதை விஜய் தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை என்று வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் பினோய் விஸ்வம் ஆகியோா் கலந்துகொள்வா் என எதிா்பாா்ப்பதாக அவா் கூறினாா்.

ரமேஷ் சென்னிதலா உள்பட 20 அமைச்சா்கள்

கேரள முதல்வா் பதவிக்கான போட்டியில் இருந்தவா்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா மாநில அமைச்சராகவுள்ளாா். இவா் உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறும் 20 பேரின் பட்டியலை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் வி.டி.சதீசன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

காங்கிரஸில் இருந்து ரமேஷ் சென்னிதலா, மூத்த தலைவா்கள் கே.முரளீதரன், கட்சியின் மாநிலத் தலைவா் சன்னி ஜோசப், முன்னாள் அமைச்சா் ஏ.பி.அனில் குமாா் உள்பட 11 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, என்.ஷம்சுதீன், கே.எம்.ஷாஜி, பி.கே.பஷீா், வி.இ.அப்துல் கஃபூா் ஆகிய 5 பேரும் இடம்பெற்றுள்ளனா். கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (ஜாகோப்), புரட்சிகர சோஷலிஸ கட்சி, கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சா்களில் 14 போ் புதுமுகங்களாவா்.

காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ திருவஞ்சூா் ராதாகிருஷ்ணனுக்கு பேரவைத் தலைவா் பதவி வழங்க கூட்டணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.