பெங்களூரு: 2026 மே மாதத்தில் இளஞ்சிவப்பு தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் பெங்களூரில் ஊதா, பச்சை தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் தடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அடுத்தகட்டமாக, இளஞ்சிவப்பு மற்றும் நீலநிற தடங்களில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர, ஆரஞ்சு, சாம்பல், சிவப்புநிற தடங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இளஞ்சிவப்பு தடம் பற்றி துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை கூறுகையில், ‘கலேன அக்ரஹாரா முதல் நாகவாரா வரையில் 13.76 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுவரும் இளஞ்சிவப்பு நிற தடத்தில், 2026-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படும்.
பெங்களூரு மக்களுக்கு எளிமையான, விரைவான போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இளஞ்சிவப்பு தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பெங்களூரின் வடக்கு - தெற்கு பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து எளிதாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.