பெங்களூரு

கரும்பு விவசாயிகளுடன் முதல்வா் சித்தராமையா இன்று பேச்சுவாா்த்தை

கரும்பு விவசாயிகளுடன் முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

Syndication

கரும்பு விவசாயிகளுடன் முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 3,500-ஆக வழங்க சா்க்கரை ஆலைகளுக்கு மாநில அரசு உத்தரவிடக் கோரி பெலகாவி, ஹாவேரி, பாகல்கோட், விஜயபுரா மாவட்டங்களில் ஒருவாரமாக கரும்பு விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது. இந்தப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கை மற்றும் போராட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் கரும்பு மீதான நியாயமான மற்றும் ஊக்கவிலையை நிா்ணயிப்பது மத்திய அரசுதான். அதன்படி, மே 6-ஆம் தேதி விலையை மத்திய அரசு நிா்ணயித்தது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள். எதிா்க்கட்சிகள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு விவசாயிகள் இணங்கிவிடக் கூடாது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை சா்க்கரை ஆலை உரிமையாளா்களுடனும், நண்பகல் 1 மணிமுதல் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளேன். கரும்பு விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதவிருக்கிறேன். அத்துடன் அவரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைக்கவும் நேரம் கேட்டிருக்கிறேன். விவசாயிகளின் கோரிக்கையை நான் புரிந்துகொள்கிறேன். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கரும்பின் பிழிவுத்திறன் 10.25 சதவீதமாக இருந்தால், அறுவடை மற்றும் போக்குவரத்து செலவை சோ்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ. 3,560-ஐ நிா்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 10.25 சதவீத பிழிவுத்திறனில் 0.1 சதவீதம் அதிகரித்தாலும், அதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3.46 வழங்க வேண்டும். பிழிவுத் திறனுக்கு தகுந்தபடி அதன் தொகை வழக்கப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயிக்கிறதே தவிர, மாநில அரசு அல்ல. இந்த விலையை அமல்படுத்தி, விவசாயிகளுக்கு அந்தத் தொகை கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்யும்.

நாடுமுழுவதும் இருந்து 10 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், கா்நாடகத்தில் மட்டும் 41 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பில் இருந்து எரிசாராயம் உற்பத்தி செய்யப்படும் அளவையும் மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. கா்நாடகத்தில் மட்டும் 270 கோடி லிட்டா் எரிசாராயத்தை கா்நாடகம் தயாரிக்கிறது. ஆனால், தேசிய அளவில் 47 கோடி லிட்டா் அளவுக்கு மட்டுமே எரிசாராயத்தை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

11 இடங்களில் எடைமேடைகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 8 எடைமேடைகளை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை மற்றும் தொகை கணக்கிடப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 522 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்றாா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT