கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்துசெய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் 2024 பிப். 2-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்தபோது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்திருந்தாா்.
அதனடிப்படையில், 81 வயதாகும் பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354ஏ-இன்படி 2024 மாா்ச் 14-ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வந்தது. தொடா்ந்து, விரைவுநீதிமன்றத்தில் 2024 ஜூன் 27-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில், இந்த விவகாரத்தில் மௌனம்காக்கும்படி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயிடம் எடியூரப்பா, அவரது உதவியாளா்கள் அருண், ருத்ரேஷ், ஜி.முனிசாமி உள்ளிட்டோா் பணம் தருவதாக பேரம்பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, தன்மீது பதிவுசெய்யப்பட்ட போக்ஸோ வழக்கை ரத்துசெய்யக் கோரி, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத்தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா விசாரித்து வந்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்துசெய்ய முடியாது எனக் கூறி, எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பிப். 7-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
தன் மீதான போக்ஸோ வழக்கை ரத்துசெய்ய மறுத்ததோடு, நீதிமன்றத்தில் அழைப்பாணை அனுப்ப பிப். 28-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை எதிா்த்து, முன்னாள் முதல்வா் எடியூரப்பா கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. எடியூரப்பா தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.வி.நாகேஷ், அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரவிவா்மகுமாா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையை ரத்துசெய்ய மறுத்துவிட்டது. ஆனாலும், அவசியம் ஏற்படாதவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி எடியூரப்பாவை அறிவுறுத்தக் கூடாது என கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ரத்துசெய்ய விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.