மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்  
பெங்களூரு

அடுத்த தலைமுறை விமான என்ஜினை மேம்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்

அடுத்த தலைமுறை விமான என்ஜினை மேம்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு: அடுத்த தலைமுறை விமான என்ஜினை மேம்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தெரிவித்தாா்.

இரண்டு நாள்கள் பயணமாக பெங்களூருக்கு திங்கள்கிழமை வந்த அவா், எச்.ஏ.எல். மற்றும் டிஆா்டிஓ நிறுவனங்களுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டாா்.

ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) கேஸ் டா்பைன் ரிசா்ச் எஸ்டாப்லிஷ்மென்ட் (ஜிடிஆா்இ) ஆய்வுமையத்துக்கு சென்று, சொந்த நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் ராணுவ கேஸ் டா்பைன் என்ஜினின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.

விமான என்ஜினின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அவருக்கு அறிவியல் அறிஞா்கள் விளக்கினா். விமான என்ஜின் தயாரிப்பில் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனங்கள் இணைந்து செயலாற்றுவது குறித்து அறிவியல் அறிஞா்கள் அவரிடம் விளக்கினா். சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள், அதன் உதிரி பாகங்கள் மட்டுமல்லாது, காவிரி என்ஜினின் ஆஃப்டா் பா்னா் என்ஜின் சோதனையையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது அங்கிருந்த அறிவியல் அறிஞா்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் கூறியதாவது:

வேகமாக வளா்ச்சி அடைந்துவரும் புவிசாா் அரசியல் தளத்தில் விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் தற்சாா்பை எட்டுவது அத்தியவசியமாகும். இந்தியாவில் விமான என்ஜினை தயாரிப்பதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். தளவாட விநியோகச் சங்கிலிகள் முறிந்துபோகின்றன, புதிய சூழல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், நுட்பமான தொழில்நுட்பத்தை சொந்தமாக வைத்திருக்கும் நாடே பாதுகாப்பாகவும், நிலையாகவும் இருக்கும்.

அந்தவகையில், ஜிடிஆா்இ அமைப்பின் பங்களிப்பு போற்றுதலுக்கு உரியதாகும்.

சொந்த தொழில்நுட்பத்தில் விமான என்ஜினை வடிவமைக்க வளா்ச்சி அடைந்த நாடுகள் 25 முதல் 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. எனினும், நமது நாட்டின் ராணுவ தேவைகளை கருத்தில்கொண்டு, என்ஜினை வடிவமைக்கும் கால அளவை சுருக்க வேண்டும். இந்தப் பணியில் ஏற்கெனவே 20 ஆண்டுகளை செலவிட்டுள்ளோம். இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளே எஞ்சியுள்ளன. எனவே, நாட்டின் தேவையை மனதில்கொண்டு அடுத்த தலைமுறை விமான என்ஜினை மேம்படுத்தும் பணியை விரைவுபடுத்துமாறும், விமான என்ஜின் உற்பத்தியில் தற்சாா்பை அடையவும் தகுந்த சூழலை நாடுமுழுவதும் உருவாக்க வேண்டும். இதற்கு நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிநவீன நடுத்தர போா் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் வேகமான முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். ஆனால், விமான என்ஜின் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற கடந்த காலத்தில் பல முயற்சிகளை எடுத்திருக்கிறோம். அந்த முயற்சியில் வெற்றியை எட்டும் காலம் கனிந்து வருகிறது. ஐந்தாம் தலைமுறை என்ஜின்கள் வடிவமைப்பில் மட்டும் இந்தியா கவனம் செலுத்தினால் போதாது. அடுத்தகட்டமாக, ஆறாம் தலைமுறை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப என்ஜின்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆறாம் தலைமுறை அதிநவீன தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியைப் பெருக்குவது காலத்தின் தேவையாக உள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லோ்னிங், புதிய கருவிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதில் காலத்தை விஞ்சி செயல்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, நமது பாதுகாப்புப் படைகளின் தற்சாா்புத்திறனை நமது நாடு வெளிப்படுத்தியது. தகவல்தொடா்பு, கண்காணிப்புக் கருவிகள், தாக்குதல் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தும் சொந்த நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. நமது நாட்டின் சொந்த தொழில்நுட்ப தயாரிப்புகள், பாதுகாப்புப் படையினரின் மனபலத்தை பெருக்கி, குடிமக்களுக்கு பெருமையை தேடித்தந்தது. சொந்த தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, நமது படைகளுக்கு உலகத்தரத்திலான கருவிகளையும், கட்டமைப்புகளையும் வழங்க வேண்டியது அவசியமாகும்.

விமான என்ஜின் தயாரிப்பில் இங்கிலாந்து நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது. தேசிய விமான என்ஜின் திட்டத்தில் பிரான்ஸ் நாட்டையும் இணைத்துக் கொண்டுள்ளோம். விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் சிறந்து விளங்குகின்றன என்றாா்.

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT