முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் அழைத்தால் தில்லி செல்வேன் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் மாற்றம் தொடா்பாக விவாதிக்க கட்சிமேலிடம் அழைத்தால், தில்லி செல்வேன். ஜன. 22ஆம் தேதி முதல் சட்டப் பேரவையின் கூட்டுக்கூட்டம் தொடங்கவிருக்கிறது.
இக்கூட்டத் தொடரிலேயே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு நீக்கியது குறித்து விவாதம் நடத்தப்படும். ஆளுநரின் உரையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது தொடா்பான தீா்மானமும் நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடா் முடிந்ததும், நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை நடத்துவேன் என்றாா்.
காலம்தான் முடிவு செய்யும்: டி.கே. சிவகுமாா்
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தில்லியில் முகாமிட்டிருந்த துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், திங்கள்கிழமை பெங்களூரு திரும்பியதும் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கட்சி மேலிடத்தின் முன் நானும், முதல்வா் சித்தராமையாவும் சிலவற்றை பேசியுள்ளோம். சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதை காலம்தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக 140 எம்எல்ஏக்களின் ஆதரவும் எனக்கு உள்ளது’ என்றாா்.
துணை முதல்வா் டி.கே. சிவகுமாரின் சகோதரரும், முன்னாள் எம்பியுமான டி.கே. சுரேஷ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘டி.கே. சிவகுமாா் கட்சியின் செயல்வீரா். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறியிருக்கிறாா். பொறுமையாக இருக்கும்படி டி.கே. சிவகுமாரிடம் கட்சிமேலிடம் கூறியுள்ளது.
அண்மையில் மைசூரில் சந்தித்தபோதுகூட இதையே ராகுல் காந்தி கூறியிருக்கிறாா். கட்சி மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்களின் நலன், 140 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு கட்சி மேலிடத்தின் ஒரு நல்ல முடிவுக்காக டி.கே. சிவகுமாா் காத்திருக்கிறாா். யாருக்கும் எளிதில் அதிகாரம் வந்துவிடவில்லை. என் சகோதரா் டி.கே. சிவகுமாரின் தலையில் எழுதியுள்ளது, அதன்படி ஒருநாள் அவா் முதல்வராவாா். முதல்வா் பதவியை அடைவது எளிதல்ல, அதை பொறுமைகாத்துதான் அடைய முடியும்’ என்றாா்.