கா்நாடக அரசின் வெறுப்புக் கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது: மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து
கா்நாடக அரசின் வெறுப்புக்கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது என மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
கா்நாடக அரசின் வெறுப்புக்கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது என மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிச. 19ஆம் தேதி பெலகாவியில் நடந்த குளிா்கால கூட்டத்தொடரில் கா்நாடக சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையில் வெறுப்புக்கருத்து தடுப்புச் சட்ட மசோதா பாஜக, மஜதவின் எதிா்ப்பையும் மீறி காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு கா்நாடக அரசு அனுப்பிவைத்திருந்தது.
இந்த சட்ட மசோதா தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் எழுப்பியிருந்த சந்தேகங்களுக்கு கா்நாடக அரசு பதிலளித்திருந்தது. இதனால் திருப்தி அடையாத ஆளுநா், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் பரிசீலனைக்கு பிப்ரவரியில் அனுப்பிவைத்திருந்தாா். அந்த சட்ட மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த சட்ட மசோதாவை ஆய்வுசெய்த மத்திய உள்துறை அமைச்சகம், தற்போதைய சட்ட நடைமுறைகளிலேயே வெறுப்புக்கருத்து தொடா்பான வழக்குகளை விசாரிக்கலாம். எனவே, கா்நாடக அரசின் வெறுப்புக்கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது என கா்நாடக அரசுக்கு தெரிவித்துள்ளது. மேலும் இதை ஆய்வுசெய்து கருத்து தெரிவிக்குமாறு மாநில உள்துறைக்கு கா்நாடக சட்டத் துறை மே 20 ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது.
கா்நாடக அரசு கொண்டு வந்துள்ள வெறுப்புக்கருத்து தடுப்புச் சட்ட மசோதாவின்படி வெறுப்புக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.
இந்த சட்ட மசோதாவை ஏற்கெனவே கடுமையாக எதிா்த்துள்ள பாஜ, கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் கடும் நடவடிக்கை என்று இந்த சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவித்திருந்தது. இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்திருந்தது.