மேலவைத் தேர்தல் வாக்காளர் பதிவில் மந்தநிலை
சிதம்பரம், அக். 19: தமிழக சட்டமேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதி மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பதிவு பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருவாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் வ
சிதம்பரம், அக். 19: தமிழக சட்டமேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதி மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பதிவு பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருவாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் வாக்காளர் பதிவில் மந்தநிலை நிலவுகிறது.
÷மேலவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளில் இருந்து 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இத் தேர்தலுக்கு வாக்காளர் சேர்க்கும் பணி நவம்பர் 6-ம் தேதியுடன் முடிகிறது.
÷ஆசிரியர் தொகுதியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் (மெட்ரிக் பள்ளிகள் உள்பட), கல்லூரி, பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1.11.2010 அன்று 3 ஆண்டு பணிமுடித்த ஆசிரியர்களும், பட்டதாரி தொகுதியில் 1.11.2007-க்கு முன்பு பட்டம் பெற்ற பட்டதாரிகளும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இவர்கள் வாக்காளர் பட்டியலில் தாங்களாக முன்வந்து தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும்.
÷ஆனால் அறிவிப்பு வெளியாகி 2 வாரங்களாகியும் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர்பதிவு மாநிலம் முழுவதும் மந்தமாக நடைபெறுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1978 மற்றும் 1984-ல் நடைபெற்ற மேலவை ஆசிரியர் தொகுதி தேர்தலின் போது வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி வாக்காளர் பெயர்களை பதிவு செய்தனர். இதனால் 90 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் முதல் கட்டத்திலேயே சேர்க்கப்பட்டனர். தற்போது ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வாக்காளர்களாக பதிவுசெய்ய அந்தந்த தாலுகா அலுவலகம் சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தரவேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டத்தை காண்பித்து வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 10 சதவீத வாக்காளர்கள் கூட பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
÷இதுகுறித்து ஆசிரியர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மேலவை உறுப்பினர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தது: பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் நேரில் சென்று மிக எளிதாக தகுதி பெற்ற வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கலாம்.
÷பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மொத்தமாக அல்லது குழுவாக யார் வேண்டுமானாலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேர்க்கலாம் என்ற நடைமுறை முன்பு வழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது தனித்தனியே நேரில் வந்து வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் வாக்காளர் பதிவில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
÷எனவே பூர்த்தி செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை யார் வேண்டுமானாலும் அலுவலகத்தில் சேர்க்கலாம் என்ற அறிவிக்க வேண்டும். அல்லது வருவாய்த்துறையினர் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி வாக்காளர்களை சேர்க்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இதுகுறித்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.