முகப்பு
சென்னை

இடிந்துவிழும் நிலையில் பஸ் நிலையக் கட்டடம்

சிதம்பரம், டிச. 7: சிதம்பரம் நகராட்சி பஸ் நிலையக் கட்டடம் மிகவும் சேதமுற்று இடியும் நிலையில் உள்ளது.  கோவில் நகரமான சிதம்பரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:21 PM
பகிர்:

சிதம்பரம், டிச. 7: சிதம்பரம் நகராட்சி பஸ் நிலையக் கட்டடம் மிகவும் சேதமுற்று இடியும் நிலையில் உள்ளது.

 கோவில் நகரமான சிதம்பரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் தினந்தோறும் ஏராளமான  மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

அனைவரும் பஸ்கள் மூலமே வருவதால், நகராட்சி பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுகாதாரமற்ற கழிப்பறை, அமர்வதற்கு போதிய வசதியின்மை, சேதமுற்ற கட்டடங்கள் ஆகியவற்றால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையக் கட்டடம் மிகவும் சேதமுற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மீது கட்டடத்தின் மேற்கூரை காரை இடிந்து விழுந்து காயமுற்றார்.

பஸ் நிலையத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக டிக்கெட் முன்பதிவு கவுன்டர், ஆம்னி பஸ் டிக்கெட் கவுன்டர் ஆகியவை உள்ள பகுதிகளில் உள்ள கட்டடத்தின் மேற்கூரை காரை எப்போது விழும் என்ற நிலையில் காணப்படுகிறது.

அப்படி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் ஏராளமான பயணிகள் பாதிப்படைவார்கள். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்குமிடத்தை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருப்பதால் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

நகராட்சி கழிப்பறைகள் சுகாதாரக்கேடாக இருப்பதால் மிகவும் அருவெறுப்போடு பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலைய கட்டங்களை சீரமைக்கவும், கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தண்ணீர் வசதியுடன் நவீன கழிப்பறை அமைக்கவும் வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.