கம்ப ராமாயணத்தில் சிறந்த சித்திரங்களையும், சூத்திரங்களையும் தீட்டியவர் கம்பர்: தமிழறிஞர் சோ. சத்தியசீலன்
புதுச்சேரி, மே 6: கம்ப ராமாயணத்தில் சிறந்த சித்திரங்களையும் சூத்திரங்களையும் தீட்டியவர் கம்பர் என்று புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா கருத்தரங்கில் தமிழறிஞர் சோ. சத்தியசீலன் குறிப்பிட்டார்
புதுச்சேரி, மே 6: கம்ப ராமாயணத்தில் சிறந்த சித்திரங்களையும் சூத்திரங்களையும் தீட்டியவர் கம்பர் என்று புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா கருத்தரங்கில் தமிழறிஞர் சோ. சத்தியசீலன் குறிப்பிட்டார்.
÷அமரர் திருமதி திரிபுரசுந்தரி சுப்பிரமணியம் அறக்கட்டளையின் சார்பில் ராம காதையில் கம்ப சித்திரம் என்னும் தலைப்பில் பேராசிரியர் தெ. ஞானசுந்தரமும், கம்ப சூத்திரம் என்னும் தலைப்பில் பேராசிரியர் அ. அறிவொளியும் பேசினார்கள். இதற்குத் சத்தியசீலன் தலைமை வகித்தார். ÷
÷கம்ப சித்திரம் என்னும் தலைப்பில் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பேசியது: சீதையின் தந்தை ஜனகனின் அவைக்களத்தில் சதானந்த முனிவர், விசுவாமித்திரர் இருக்கின்றனர். எதிரே தசரதனின் பிள்ளைகள் ராமன், லட்சுமணன் இருக்கின்றனர். வேள்வியைக் காண வந்தவர்கள், வில்லையும் காண்பார்கள் என்று கம்பர் அந்த அவைக் களத்தை ஓர் ஓவியமாகச் சொல்லில் படைத்துக் காட்டுகிறார். மேலும் தூக்க முடியாத அந்த வில்லை 60 ஆயிரம் வீரர்கள் தண்டு இட்டு தூக்கி வருகிறார்கள். இந்த வில்லை ராமன் ஒடித்தான். இந்த வில் எப்படிபட்டது என்பதை அங்கு குழுமியிருக்கும் பெண்கள் பேசிக் கொள்வதாகவும் படைத்துக் காட்டுகிறார் கம்பர் என்றார் ஞானசுந்தரம்.
Advertisement
÷கம்பசூத்திரம் என்னும் தலைப்பில் அ. அறிவொளி பேசியது: சூத்திரம் என்பது அளவு கோல். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. கம்பராமாயணத்தின் சூத்திரமே அறம் வெல்லும். பாவம் தோற்கும் என்பதுதான். இதுதான் கம்பராமாயணத்தின் பாவிகம் என்றும் சொல்வார்கள்.
கம்பராமாயணத்தில் யுத்தக்காண்டத்தில் கிளைமேக்ஸ் எது தெரியுமா ராவணன் தோற்றுவிட்டான். அதற்குப் பிறகும் அந்தக் கதை விருவிருப்பாகச் செல்கிறது. அது எப்படி கம்பனால் முடிந்தது. தோல்வியில் துவண்டு கிடந்த ராவணனை அவனுடைய தாத்தா மாளியவான் முதலில் சந்திக்கிறார். அப்போது நீ தோற்றிருக்கலாம். ஆனால் நீ பெற்ற வரங்களுமா தோற்றுவிட்டன என்று தைரியம் ஊட்டுகிறார். அப்போது படுத்துக் கிடந்த ராவணன் எழுந்து உட்கார்ந்துவிட்டான். பின்னர் ராவணனை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்திக்கும் கதா பாத்திரங்களைப் படைத்து, உனக்குத் தம்பி இளையவன் கும்பக்கர்ணன் இருக்கிறான், மகன் இந்திரஜித் இருக்கிறான், உத்தம வீரன் தோல்வியைப் பற்றி கவலைப்படக்கூடாது மறுபடியும் சண்டைக்குப் போக வேண்டும் என்று கூறி - இன்று உளார் நாளை மாள்வார்- என்று கம்பர் சூத்திரமாகப் படைத்துக் காட்டுகிóறார். இது போன்று பல்வேறு இடங்களில் சூத்திரங்களாகச் சுருங்கச் சொல்லி பெரியக் கருத்துகளை விளங்க வைக்கிறார் கம்பர் என்றார் அறிவொளி.
கம்பன் விழா எதற்கு? இந்த விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய தமிழறிஞர் சோ. சத்தியசீலன் கம்பன் விழா எதற்கு என்று விளக்கம் அளித்தார். அவர் தன்னுடைய தொடக்க உரையில் கம்பன் விழா என்பது தமிழுக்கான விழா அல்ல. கம்பனுக்கும், கம்பராமாயணத்துக்கும் எடுக்கப்படும் விழாவும் அல்ல. தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை மீண்டும் நினைவூட்டும் விழா. இதை மறந்திருக்கிறோம். அதனால்தான் இந்த விழா மூலம் நினைவூட்டுகிறோம். கம்ப ராமாயணத்தில் சிறந்த சித்திரங்களையும், சூத்திரங்களையும் தீட்டியவர் கம்பர் என்றார்.