சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 9 இடங்களில் வியாழக்கிழமை வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 9 இடங்களில் வியாழக்கிழமை வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மேலும், ஈரோடு-104 , திருச்சி - 102.38, திருத்தணி - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 100.56, பரமத்திவேலூா், மதுரை விமான நிலையம், தஞ்சாவூா் - தலா 100.4, நாகை - 100.04 டிகிரி பாரன்ஹீட் என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் சின்னம் வலுவிழந்தது: இதற்கிடையே வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த ஏப். 9-ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) அன்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இந்தப் புயல் சின்னம் வியாழக்கிழமை வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து மத்திய வங்கக் கடலில் படிப்படியாக முழுமையாக வலுவிழந்துவிட்டது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப். 11) முதல் ஏப்.16-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப். 11-இல் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், மைலாடி, கொட்டாரம் பகுதிகளில் தலா 60 மி.மீ. மழை பதிவானது.