முகப்பு
தமிழ்நாடு

கோடைக்காலம் தொடங்கியது! வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு!

தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்திருப்பதாவது:

Updated On : 1 மார்ச் 2026, 10:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

அம்பாசமுத்திரம்: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் எனவும் மலையேற்றத்திற்கு தமிழக வனத்துறை தடை செய்ய வேண்டும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிகழாண்டு கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும். பரவலாக வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மலைப்பகுதிகளில் மலையேற்றத்திற்கு தமிழக அரசு மற்றும் வனத்துறை தடைவிதிக்க வேண்டும் என்று தனியார் கால நிலை ஆய்வாளர் தென்காசி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் மே 31 வரையிலான கால கட்டமே கோடைக் காலமாகும். இந்நிலையில் நிகழாண்டு கோடைக் காலம் இன்று முதல் தொடங்குகிறது. நிகழாண்டு வெப்பநிலையை பொறுத்தவரை கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

Advertisement

Advertisement

மேலும் கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் மாதத்தில் இயல்பான அளவிலேயே வெப்பநிலை பதிவாகும். குறிப்பாக உதகை, கொடைக்கானலுக்கு அடுத்தப்படியாக தென் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாகவே பதிவாகும்.

கிழக்குக் கடல் காற்று தமிழகப் பகுதிக்குள் நுழைவதால் கோடியக்கரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உவரி ஆகிய கடலோரப் பகுதிகளில் மிதமான வெப்பமே காணப்படும்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் முழுவதுமே இயல்பைவிட மிக அதிகமாக வெப்பநிலை அதிகரிக்கும். கோடைக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தாலும் ஆகஸ்ட் மாதம் வரை வெய்யில் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வனத்துறைக்கு சவாலான பணி: நிகழாண்டு வெய்யில் சுட்டெரிக்கும் என்பதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைக் காலங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் காட்டுத் தீ போன்ற சவால்களை எதிர்கொள்ள தமிழக வனத்துறை பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது.

மேலும் தீ தடுப்புக் கோடுகள் உருவாக்குதல், வனப்பணியாளர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்குதல், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களிடம் காட்டுத் தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மலையேற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்திற்கு (Trekking) தடை செய்ய வேண்டும். கோடைக் காலங்களில் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது.

கோடைமழை எப்படி? கோடைக்காலத்தில் தமிழகம் சராசரியாக 125 மி.மீ. மழையை பெறும். அதிலும் குறிப்பாக தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தான் கோடைக் காலத்தில் அதிகமழையை பெறும் மாவட்டங்களாக உள்ளன.

அதிகமழையை பெறும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் இரவு நேரங்களில் கோடைமழையும் குறிப்பிடத்தக்க அளவு பதிவாக வாய்ப்புள்ளது. நிகழாண்டு கோடைமழையை பொருத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி, திண்டுக்கல், கோயம்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மே மாதங்களில் தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும். கோடைமழை என்பதால் தரைக்காற்று பலமாக வீசும். மாலை, இரவு நேரங்களில் இடி மின்னலுடன் வலுவான மழை பெய்யும்.

இந்தாண்டு கோடைகாலத்தில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரி பயிர் செய்யும் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

கோடைமழை எவ்வளவு ?

தமிழகத்தில் கோடைக்காலங்களில் மாநிலத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் அதிகமான மழையை பெறுகிறது. கோடைக்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சராசரியாக 272 மி.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் சராசரியாக 213 மி.மீ. மழையும், தென்காசி மாவட்டம் சராசரியாக 180 மி.மீ. மழையும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் சராசரியாக 171 மி.மீ. மழையும், தருமபுரி மாவட்டம் 170 மி.மீ. மழையும் பெறுகின்றன.

summary

Private meteorologist Raja has said that the summer heat in Tamil Nadu will be scorching and that the Tamil Nadu Forest Department should ban mountain trekking.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments