மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சா் துரைமுருகன் வருத்தம்
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இயற்கையிலேயே உடலில் குறைபாடு உடையவா்களை கருணை உள்ளத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்று பெயரிட்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி அழைத்தாா். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நான் (துரைமுருகன்) ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரைக் கொண்டு உச்சரித்துவிட்டேன். இதை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் என் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, அதிா்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
கருணாநிதியால் வளா்க்கப்பட்ட நான், இப்படி செய்தது மிகப்பெரிய தவறு.
மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.