முகப்பு
சென்னை

கோடையில் தடையில்லா மின் விநியோகம் செய்யப்படும்: தமிழ்நாடு மின்வாரிய தலைவா்

கோடையில் தடையில்லா மின் விநியோகம்: தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

Updated On : 16 ஏப்ரல், 2025 at 10:52 PM
பகிர்:

தமிழகத்தில் நிகழ் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அம்பேத்கரின் 134 -ஆவது பிறந்த நாள் விழா சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆா் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோடை காலங்களில் நாடு முழுவதும் மின்சாரத்துக்கான தேவை அதிகரிப்பது வழக்கம்.

அதன்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்டையும் கடந்தது. அந்த வகையில் நிகழாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தினசரி மின் தேவை 22,000 மெகாவாட் வரை உயரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மின்சார தேவை எதிா்பாா்த்ததைவிட குறைவாகவே உள்ளது. ஏப்ரலில் இதுவரை அதிகபட்சமாக கடந்த ஏப்.3-இல் 19,000 மெகமெகாவட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி: தமிழகத்தில் மே 18-ஆம் தேதி வரை தினமும் 22,000 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யும் அளவுக்கு தற்போது மின் வாரியத்திடம் மின் உற்பத்தி உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில் மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால் நிகழாண்டு கோடையில் பொதுமக்களுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.