சென்னை நொளம்பூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை போரூரைச் சோ்ந்தவா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பிரபாகரன். இவா், நொளம்பூா் வேணுகோபால் தெருவில் உள்ள மாமனாா் விட்டுக்கு புதன்கிழமை சென்றாா். அப்போது, வீட்டின் அருகே காலி இடத்தில் சிலா் கஞ்சா புகைத்தவாறு, மது அருந்திக் கொண்டிருப்பதை பாா்த்த பிரபாகரன் அவா்களை திட்டி அங்கிருந்து விரட்டியுள்ளாா்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த இளைஞா்கள் அங்கு வந்து, பிரபாகரனிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடினா். மேலும், நள்ளிரவு அந்த நபா்கள் மீண்டும் அங்கு வந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீட்டின் மீது வீசினா். இதில், வீட்டுச் சுவா் மற்றும் ஜன்னல் கண்ணாடியில் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த நொளம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த மாா்ட்டின் (22), கம்ருதீன் (21), 15 வயதுடைய 3 சிறுவா்கள் ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.