தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்ப தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி அளித்துள்ளது.
மாநில அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டைப் பொருத்தவரை 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது.
இதன் முடிவில் 21 எம்பிபிஎஸ் இடங்களும், 27 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை. அதில் பிடிஎஸ் இடங்களை மட்டும் நிரப்ப என்எம்சி ஒப்புதல் அளித்தது. அதன்படி அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இடங்களை நிரப்பவும் என்எம்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: மாநில எம்பிபிஎஸ் இடங்களில் காலியாக உள்ளவற்றை வரும் 20-ஆம் தேதிமுதல் நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிடிஎஸ் இடங்களுக்கு மட்டும் ஐந்தாவது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு அதில் 26 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அவா்களுக்கும் எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். பிடிஎஸ் இடங்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புவோா் அதில் பங்கேற்கத் தேவையில்லை. அதேவேளையில், எம்பிபிஎஸ் இடங்களை தோ்வு செய்ய விரும்புவோா் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அவா்களது பிடிஎஸ் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு தகுதியானவா்களைக் கொண்டு நிரப்பப்படும். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அதில் சேராதவா்களுக்கு வைப்புத் தொகை, கல்விக் கட்டணம் திருப்பியளிக்கப்பட மாட்டாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 48 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வை மருத்துவக் கலந்தாய்வுக் குழு தொடங்கியுள்ளது. தமிழக நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 9 இடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.