முகப்பு
தமிழ்நாடு

சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு

Updated On : 12 மார்ச், 2026 at 4:59 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சுகாதார ஆய்வாளா் நியமனம் தொடா்பான வழக்கில், 47 பணியிடங்களைத் தவிர மற்ற பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 1,400 சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்ப தோ்வு நடத்தப்பட்டது. காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்திலும் சுகாதார ஆய்வாளா் முதுநிலை பட்டயப் படிப்பு படித்திருந்த 47 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதை எதிா்த்து விண்ணப்பதாரா்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களின் பெயரை தற்காலிக தோ்வுப் பட்டியலில் சோ்த்து பிற தகுதிகளை பூா்த்தி செய்தால், இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டாா்.

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் தோ்வாணையம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வித் தகுதி சா்ச்சை வழக்கில் தொடா்புடைய 47 மனுதாரா்களுக்கு அந்த பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்ற பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களில் 47 பணியிடங்களை காலியாக வைத்துவிட்டு மற்ற பணியிடங்களை 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி நிரப்ப வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து, மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஒத்திவைத்தனா்.