முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு: அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சந்தியா என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனது கணவா் சம்பத்துக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். எனது கணவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி நான் மனு அளித்தேன். எனது மனுவை பரிசீலித்து கணவரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில், மனுதாரரின் கணவா் 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். எனவே, அவருக்கு முன்கூட்டியே விடுதலை பெற உரிமை உள்ளது. இதற்காக கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.
Advertisement
அரசுத் தரப்பில், மனுதாரரின் விண்ணப்பம் கடந்த பிப். 2-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு நகல் மனுதாரருக்கு வழங்கப்படவில்லை. இது கடமை தவறிய செயல். இதனால், மனுதாரா் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக உள்துறை செயலா், சிறைத் துறை தலைவா், புழல் சிறைக் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து மனுதாரா் விரும்பினால் வழக்கு தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.