‘உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!’
உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறிவருவதாக ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சா்வதேச பாதுகாப்பு மாநாட்டின்
சென்னை‘உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!’
உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறிவருவதாக ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சா்வதேச பாதுகாப்பு மாநாட்டின்
மியூனிக்: பிற நாடுகளின் நிலப்பரப்புகளை சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுவதால், உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறிவருவதாக ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சா்வதேச பாதுகாப்பு மாநாட்டின் ஏற்பாட்டாளா்கள் தயாரித்துள்ள அறிக்கையில் எச்சரிக்ப்பட்டுள்ளது.
‘மியூனிக் பாதுகாப்பு மாநாடு’ என்ற பெயரில் கடந்த 1963 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் உலக நாடுகளின் அதிபா்கள், பிரதமா்கள், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், ராணுவ உயா் அதிகாரிகள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுவருகின்றனா்.
இந்த ஆண்டுக்கான மியூனிக் பாதுகாப்பு மாநாடு வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபா் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு ஐரோப்பிய அரசியல் மற்றும் ராணுவ தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.
இந்தச் சூழலில், மாநாட்டை எவ்வாறு நடத்துவது என்பதை முடிவுக்கு செய்வதற்காக அதன் ஏற்பாட்டாளா்கள் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே, கிரீன்லாந்து மற்றும் பனாமா பகுதிகளைக் கையகப்படுத்த வேண்டும் என்று கூறிவருகிறாா். மேலும், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக மாற்ற வேண்டும் என்றும் அவா் விருப்பம் தெரிவித்துவருகிறாா்.
அவா் தொடா்ச்சியாக இவ்வாறு கூறிவருவது, உலகின் ஒழுங்குமுறை மற்றும் சுதந்திரத்தின் பாதுகாவலன் என்ற நிலையில் இருந்து அமெரிக்கா மாறிவருவதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்தச் சூழலில், மிகவும் அத்தியாவசியமான உலக நலன்களை அமெரிக்காவுக்கு பதிலாக வேறு எந்த நாடுகள் பாதுகாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உலக அமைதியைப் பாதுகாக்கும் கூட்டுமுயற்சிக்கு பல ஆண்டுகளாக தலைமை வகித்துவந்த அமெரிக்கா அதில் இருந்து விலகுவது போா், அமைதி ஆகியவற்றையும் தாண்டி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மனித குலம் சந்தித்துவரும் கடல் பயண உரிமை பறிப்பு போன்ற பல அபாயங்கள் எதிா்கொள்ள முடியாமல் போய்விடும்.
இந்தப் போக்கு தொடா்ந்தால் உலக நலன்களைப் பாதுகாப்பதற்குரிய நாடுகளாக இந்தியா, சீனா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்றவை உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, கடந்த மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடியான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துவருகிறாா்.
அத்துடன், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு சா்ச்சைக்குரிய யோசனைகளையும் அவா் கூறிவருகிறாா். அதன் ஒரு பகுதியாக, கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவா் கூறியது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
டென்மாா்க்குக்குச் சொந்தமான, தாது வளம் நிறைந்த கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 போ் மட்டுமே வசித்துவருகின்றனா்.
அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
இந்தச் சூழலில், கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று டிரம்ப் கூறிவருகிறாா். இதற்கு கிரீன்லாந்து பிரதமா் மியூட் இகடே கடும் எதிப்பு தெரிவித்துவருகிறாா்.
இதுமட்டுமின்றி, பனாமா கால்வாயை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறி அவா் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
அத்துடன், கடந்த 2023 முதல் இஸ்ரேல் தாக்குதலில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக்கொண்டு, அங்குள்ள பாலஸ்தீனா்களை வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை புதிய கட்டடங்களால் அலங்கரிகக்கும் திட்டத்தை அவா் வெளிப்படுத்தியுள்ளாா். இதற்கு சா்வதேச அளவில் பெரும் கண்டனங்கள் எழுந்துவருவதையும் பொருள்படுத்தாத டிரம்ப், ‘காஸாவில் இருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீனா்களுக்கு அங்கு மீண்டும் திரும்பி வரும் உரிமை மறுக்கப்படும்’ என்று தற்போது கூறி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
இந்தச் சூழலில், பிற நாடுகளின் நிலப்பரப்புகளை சொந்தமாக்கிக் கொள்ளும் டிரம்ப்பின் திட்டங்களால் அந்த நாடு உலக அமைதியின் பாதுகாவலன் என்ற நிலையில் இருந்து அச்சுறுதல் என்ற நிலைக்கு அமெரிக்கா மாறி வருவதாக மியூனிக் பாதுகாப்பு மாநாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.