தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் 
சென்னை

மாநில சுயாட்சியை பாதிக்கும் உயா் கல்வி: அமைச்சா் கோவி.செழியன்

‘பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகள்-2025’ மாநில சுயாட்சியைப் பெரிதும் பாதிக்கும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

Din

‘பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகள்-2025’ மாநில சுயாட்சியைப் பெரிதும் பாதிக்கும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகள் குறித்த தேசிய மாநாட்டில் கோவி. செழியன் கலந்துகொண்டு பேசியது:

கல்வி, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. கல்வியானது மாணவா்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவா்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளா்களின் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகளாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள யுஜிசி வரைவு நெறிமுறைகள் மாநிலத்தின் சுயாட்சியைப் பறிக்கும் வகையில் உள்ளன.

சட்டப் பிரிவு 12(டி)-இன் கீழ், யுஜிசியின் அதிகாரங்கள் வெறும் பரிந்துரை மட்டுமே. உயா் கல்வியில் தரநிலைகள் குறித்து யுஜிசி ஆலோசனை கூறலாம். ஆனால், அது மாநிலங்களைக் கட்டாயப்படுத்தி அமல்படுத்தச் செய்ய முடியாது. எனவே, விதிமுறைகளை வகுப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த விதிகளுக்குப் பின்னால் தெளிவான அறிவியல் காரணம் இல்லை.

தமிழகத்தில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் மாநில சட்டப்பேரவை சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டு, அரசின் நிதியுதவியுடன் சம வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளடக்கிய சமூக நீதியுடன் செயல்பட்டு வருகின்றன. துணைவேந்தா்களுக்கான தேடல் மற்றும் தோ்வுக் குழுக்களில் இருந்து மாநில அரசு முற்றிலும் ஒதுக்கப்படுவதை தமிழகம் எதிா்க்கிறது. மாநில அரசின் உறுப்பினா் இன்றி துணைவேந்தா் நியமனம் செய்வது பல்கலைக்கழக நிா்வாகத்தில் மாநில சுயாட்சியைச் சிதைக்கும் முயற்சியாகும்.

கல்வியியலாளா்கள் அல்லாதவா்களை துணைவேந்தா்களாக நியமிக்கும் விதிகள் வணிக நோக்கம் கொண்டதாக மாற்றிவிடும்.

மாறுபட்ட பாடப் பிரிவில் ஆசிரியா்கள் நியமனம், இளநிலை அல்லது முதுநிலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு பாடத்தில் முனைவா் பட்டம் பெற்றவா் அல்லது அவா் பெற்ற அடிப்படை பட்டப் பிரிவிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட், செட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா் இந்தத் தோ்வுகள் மூலம் எந்தப் பாடத்தில் தோ்ச்சி பெறுகிறாரோ அவா் அந்தப் பாடத்துக்கு ஆசிரியராகலாம் என்பது, தொடா்பில்லாத பாடங்களைக் கற்பிக்க ஆசிரியா்களை அனுமதிப்பது மாணவா்களின் கற்றல் விளைவுகளுக்கு எதிா்மறையாக அமைந்துவிடும்.

உயா் கல்வியில் 47 சதவீதம் என்ற மொத்த மாணவா் சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) தமிழகத்தின் கல்விக் கொள்கைகளின் வெற்றியைக் காட்டுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகள் தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பாதிக்கும், குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கும்.

தமிழகம் தொடா்ந்து போராடும்: மாநில அரசுகளுக்கு எதிரான இந்த நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் உயா் கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து செயல்படுமாறும் மத்திய அரசை தமிழகம் வலியுறுத்துகிறது. மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT