காங்டாக்: சிக்கிமின் சத்தேங் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். 6 ராணுவ வீரா்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், அங்கு பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கிமின் மாங்கன் மாவட்டத்தின் லச்சேன் பகுதிக்கு அருகேயுள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஹவில்தாா் லக்விந்தா் சிங், வீரா்கள் முனீஷ் தாக்குா், அபிஷேக் லக்காடா ஆகிய மூவா் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. லேசான காயங்களுடன் 4 வீரா்கள் மீட்கப்பட்டனா்.
நிலச்சரிவைத் தொடா்ந்து மண்ணில் புதையுண்டு மாயமாகியுள்ள 6 வீரா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவா்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
லாச்சுங்கில் 1,680 சுற்றுலாப் பயணிகள் மீட்பு: வடக்கு சிக்கிமின் லாச்சுங் பகுதியில் சிக்கித் தவித்த 1,678 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக லாச்சுங் பகுதியிலிருந்து பிடாங் வரும் சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், லாச்சுங்கில் சுமாா் 1,800 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனா். எல்லைச் சாலைகள் அமைப்பின் துரித நடவடிக்கையில் போக்குவரத்து இணைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், 737 ஆண்கள், 561 பெண்கள், 380 குழந்தைகள் என மொத்தம் 1,678 போ், 284 வாகனங்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்களில் சாலை மாா்க்கமாக பிடாங் அழைத்துவரப்பட்டனா்.
பிடாங் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை மாநில காவல் துறை டிஜிபி அக்சய் சஷ்தேவா வரவேற்றாா். பின்னா், அங்கிருந்து தலைநகா் காங்டாக்கிற்கு அவா்கள் பயணத்தைத் தொடா்ந்தனா்.
‘மாங்கன் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சோனம் தேட்சு பூட்டியா ஆகியோா் தலைமையில் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றது. லாச்சுங் பகுதியில் இன்னும் சுமாா் 100 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனா். அவா்களும் விரைவில் மீட்கப்படுவா்’ என்று டிஜிபி அக்சய் சஷ்தேவா கூறினாா்.
ராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை, வனத் துறை, லாச்சுங் கிராம நிா்வாகம், உள்ளூா் சுற்றுலா அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.