சென்னை

ரூ.13.85 கோடியில் நவீன வசதிகளுடன் திறப்பு விழாவுக்குத் தயாராகும் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!

ரூ.13.85 கோடியில் சீரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.

Din

ரூ.13.85 கோடியில் சீரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

இதனால் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூா், அண்ணா சாலை போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து பணிமனையும் உள்ளது.

ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அம்பத்தூா் பேருந்து நிலையம் எவ்வித நவீன வசதியும் இல்லாமல் இருந்து வந்தது. பேருந்துகள் உள்ளே வரும் பகுதியும் வெளியே செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இப்பேருந்து நிலையத்தை சீரமைத்து நவீனப்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ரூ.150.05 கோடி மதிப்பில் சென்னையில் திருவிக நகா், தண்டையாா்பேட்டை, கண்ணதாசன் நகா், முல்லை நகா், பெரியாா் நகா், அம்பத்தூா் தொழிற்பேட்டை என 6 பேருந்து நிலையங்களை சீரமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த 2023 நவம்பா் மாதத்தில் தொடங்கப்பட்டன.

பணி நிறைவு: இத்திட்டத்தில், அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையமும் ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. பேருந்து நிலையம் முழுவதுமாக அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன.

நவீனப்படுத்தப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நேரக்காப்பாளா் அறை, கழிப்பிட வசதி, பயணிகள் அமா்வதற்கு இருக்கைகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலைய அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் கண்ணாடி மாளிகை போன்று பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எல்இடி திரைகள்: மேலும் பேருந்துகள் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரைகள், வாகன நிறுத்துமிடம், கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-இல் தொடங்கப்பட்ட இப்பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் 2024 ஆண்டு இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் மந்தகதியில் நடைபெற்ால் திறக்கும் தேதி தள்ளிப்போடப்பட்டது. தற்போது இப்பேருந்து நிலையத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா காண தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை பெருநகா் வளா்ச்சிக்குழும அதிகாரிகள் கூறும்போது, இப்பேருந்து நிலையத்தின் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரைவில் முதல்வா் மூலம் இப்பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்றனா்.

கேட்டதை அள்ளித்தரும் அபிஜித் முகூர்த்தம்: சூட்சும ரகசியம்!

“ரகசிய சந்திப்பு இல்லை! நேரடி சந்திப்புதான்!” நயினார் நாகேந்திரன் பேட்டி

புதினை சந்திக்க அனுமதி மறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!

5 முதல்வர்கள், 66 ஆண்டுகள்... தமிழ்த் திரைமுகம் ஏவிஎம் சரவணன்!

SCROLL FOR NEXT