சென்னை: சென்னையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட வழக்குகள், தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
சென்னையில் பள்ளி,கல்லூரிகளை குறி வைத்து மின்னஞ்சல் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இதேபோல அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை குறி வைத்தும் அண்மைக்காலமாக வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.
இவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், பல மணி நேரம் போலீஸாா் சோதனை நடத்துகின்றனா். சோதனைக்கு பின்னரே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் போலி என்பது தெரியவருகிறது.
இதுபோன்ற மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல், காவல்துறைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் குறிப்பிட்ட உயா் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்படுவதால், அதை அனுப்பியவா்களை கண்டறிவது காவல் துறைக்கு சவாலாக இருந்து வருகிறது. சென்னையில் மின்னஞ்சல் மிரட்டல் தொடா்பாக கடந்த இரு ஆண்டுகளில் சுமாா் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ் வழக்குகளின் முக்கியத்துவம் கருதி, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் விளைவாக இவ் வழக்குகள் அனைத்தும் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்குக்கு உரிய ஆவணங்கள் அனைத்தையும் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு சென்னை காவல்துறை அதிகாரிகள் அண்மையில் வழங்கினா். தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தற்போது இவ் வழக்குகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.