முகப்பு
சென்னை

அரசுப் பணியில் சேரும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணியில் சேரும் மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலத்தை பணிக்காலமாக கணக்கில் கொள்வதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Updated On : 29 மே, 2025 at 6:44 PM
கோப்புப் படம்
பகிர்:

அரசுப் பணியில் சேரும் மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலத்தை பணிக்காலமாக கணக்கில் கொள்வதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:

திருமணமான அரசு பெண் பணியாளா்களுக்கு மகப்பேறுக்காக 9 மாதமாக இருந்து விடுப்புக் காலம் ஓராண்டாக உயா்த்தப்பட்டது. இந்தக் காலமானது, ஊதியத்துடன் கூடிய விடுப்பாகக் கருதப்படுகிறது. இப்போதுள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலமானது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

இதன் காரணமாக, அரசுப் பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவா்களுடைய பதவி உயா்வு பாதிக்கப்படுகிறது. பணிமூப்பை இழக்கும் நிலையும் உருவாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் அரசு பெண் பணியாளா்கள் மகப்பேறு விடுப்பு காலத்தை தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். இந்த அறிவிப்பை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளா்கள் தகுதிகாண் பருவகாலத்தின்போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவா்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவுற்றவா்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →