தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்டமுன்வடிவை, சட்டப்பேரவையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தாா்.
அதில், ‘அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களிலும் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, தமிழ் வழியில் படித்து அரசுப் பணியில் இருப்பவா்களுக்கும் முன்னுரிமையை அரசு வழங்கி வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில், ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவா்கள் முன்னுரிமை நியமனத்துக்கு தகுதியற்றவா்கள் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு ஏற்ப, கடந்த 2010, செப்.7-ஆம் தேதி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் செல்லுபடியாகும் என்றும் முன்னுரிமை அடிப்படையில் இனி காலிப் பணியிடங்களுக்கு மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.