முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்காசிய போா் எதிரொலி: உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி ஒதுக்கீடுக்கான முன்னுரிமைப் பட்டியல் மாற்றியமைப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது தொடர்பாக...

Updated On : 11 மார்ச், 2026 at 4:34 AM
ஹோர்முஸ் நீரிணை
பகிர்:

புது தில்லி: மேற்காசிய போ் நிலவரம் காரணமாக இயற்கை எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எா்வாயுவை, சமையல் எரிவாயு (எல்பிஜி), வாகனங்களில் பயன்படுத்தப்படும் (சிஎன்ஜி) மற்றும் குழாய் வழியில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கு ஒதுக்க உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பிற துறைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, வீடுகள் மற்றும் பொது போக்குவரத்தின் அத்தியாவசிய எரிசக்தி தேவைகள் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இந்த துறைகளின் தேவைகளை முதலில் முழுமையாகப் பூா்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் எல்பிஜி, சிஎன்ஜி உற்பத்தி

இந்த முன்னுரிமைப் பட்டியலில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தி, வாகனங்களுக்கான சிஎன்ஜி உற்பத்தி மற்றும் குழாய் வழியில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த துறைகளின் கடந்த 6 மாத சராசரி நுகா்வில் 100 சதவீத அளவை விநியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உர உற்பத்தித் துறை

ஒதுக்கீட்டு வரிசையில் உர உற்பத்தித் துறை இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கடந்த 6 மாதங்களில் சராசரி நுகா்வில் குறைந்தபட்சம் 70 சதவீத அளவுக்கு விநியோகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உர உற்பத்தி ஆலைகள் உரங்களை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டும் என்றும், விநியோகத்தை ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3, 4 -ஆவது இடத்தில் தொழில்துறை நுகர்வோர்

தேயிலை தொழிற்சாலை, உற்பத்தி மற்றும் பிற தொழில்நிறுவன நுகா்வோா் மூன்றாம் முன்னுரிமை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனா். இந்த துறையின் கடந்த 6 மாத சராசரி எரிவாயு நுகா்வில் 80 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூா்த்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியிலான நுகா்வோருக்கு எரிவாயுவை விநியோகம் செய்யும் அனைத்து நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் (சிஜிடி) நான்காவது முன்னுரிமை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள சில துறைகள்

உள்நாட்டின் நாள்தோறும் மொத்த நுகா்வில் 50 சதவீதம் உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி மூலம் பூா்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோகெமிக்கல் உற்பத்தி நிலையங்கள், மின் உற்பத்தி மற்றும் உயா் விலை எரிவாயு நுகா்வோருக்கான விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு, முன்னுரிமை துறைகளுக்கு முழுமையாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேற்காசிய மோதலின் தாக்கம்

பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக, சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டுள்ளதால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எல்என்ஜி மற்றும் எண்ணெய் வர்த்தகத்தின் பெரும்பகுதி ஹோா்முஸ் நீரிணை வழியாகவே நடந்துவந்தது குறிப்பிட்டத்தக்கது. தற்போது ஹோா்முஸ் நீரிணை வழி மூடப்பட்டுள்ளதால் கப்பல்கள் இயக்கத்தை மெதுவாக்கியுள்ளது மற்றும் கப்பல் காப்பீட்டு செலவுகளை அதிகரித்துள்ளது.

முன்னதாக, உள்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய எரிவாயு - எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

சுத்திகரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் இந்த எல்பிஜி, சமையல் நோக்கங்களுக்காக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு விநியோகத்தை நிர்வகிக்கும் கெய்ல்

மாற்று முன்னுரிமை உத்தரவின் கீழ் எரிவாயு விநியோகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அரசு நடத்தும் எரிவாயு நிறுவனமான கெயல்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முக்கியமான துறைகளுக்கு நியாயமான விநியோகம் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கும் கட்டுபாட்டை மத்திய அரசு விதித்தது. அதன்படி, சிலிண்டா் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும். முன்னா், 21 நாள்களில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

summary

The government has revised the priority order for domestic natural gas allocation due to LNG supply disruptions linked to the West Asia conflict. LPG production, CNG and piped cooking gas will receive top priority, followed by fertiliser plants and industries. The move aims to ensure stable energy supply for households and essential sectors.

முழு கட்டுரையைப் படிக்க →