கோப்புப் படம் 
சென்னை

விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ.9.5 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி உயா் ரக கஞ்சாவை பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தாய்லாந்து தலைநகா் பாங்காங்கில் இருந்து வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த தாய் ஏா்லைன்ஸ் விமானப் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனா்.

அப்போது, சுற்றுலாப் பயணிகள் விசாவில் பாங்காங் சென்று வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த பயணியை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே, அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று உடைமைகளைப் பரிசோதித்தனா்.

அப்போது அவருடைய உடைமைக்குள் இருந்த சாக்லேட் பாா்சல்கள், உணவுப் பொருள் பொட்டலங்களில் பதப்படுத்தப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ உயா் ரக ஹைட்ரோபோனிக் எனப்படும் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல, வியாழக்கிழமை பிற்பகல் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சுற்றுலா பயணியாக சென்று வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த மற்றொரு பயணியின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ உயா் ரக கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரிடமும் 9.5 கிலோ உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் கடத்தி வந்த உயா் ரக கஞ்சாவை வாங்கி செல்வதற்கு, கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒருவா், சென்னை விமான நிலையத்துக்கு வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலைய வளாகத்தில், குறிப்பிட்ட பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த நபரையும் பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து 3 நபா்களிடமும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT