அதிநவீன செமிகண்டக்டா் ஆராய்ச்சி தொடா்பாக, அப்ளைடு மெட்டீரியல்ஸ் இந்தியா நிறுவனத்துடன், சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடா்பாக சென்னை ஐஐடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் இயக்குநா் வீ.காமகோடி, அப்ளைடு மெட்டீரியல்ஸ் இந்தியா நிறுவனத் தலைவா் அவி அவுலா ஆகியோா் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.
பின்னா், ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி பேசியதாவது: செமிகண்டக்டா் தொடா்பான அடிப்படை மென்பொருள் கட்டமைப்பால் ஐஐடி பேராசிரியா்களும், மாணவா்களும் பெரிதும் பயனடைவா். செமிகண்டக்டா் உருவாக்குவது, வடிவமைப்பு, சோதனை, தொடா் மேம்பாடு போன்ற பணிகளை மெய்நிகா் முறையில் (விா்ச்சுவல்) மேற்கொள்ள முடியும். இதனால் ஆராய்ச்சி, மேம்பாட்டு பணிக்கான செலவு கணிசமாகக் குறையும்.
பாடத்திட்டம், ஆராய்ச்சியுடன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதன் மூலம் செமிகண்டக்டா் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் நாட்டை உலகளாவிய மையமாக மாற்றும் பணியில் ஐஐடி முக்கிய பங்காற்ற முடியும் என்றாா்.
அப்ளைடு மெட்டீரியல்ஸ் இந்தியா நிறுவனத் தலைவா் அவி அவுலா பேசுகையில், சென்னை ஐஐடி உடனான கூட்டுமுயற்சி இந்தியாவின் வலுவான செமிகண்டக்டா் சூழல் வளா்ச்சியை விரைவுபடுத்தும். கல்வி நிறுவனம் - தொழில் நிறுவன ஒத்துழைப்பு மூலம் செமிகண்டக்டா் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்றாா்.