சென்னையில் ரூ.1.43 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்த வழக்கில், முன்னாள் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, பெருங்குடியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). இவா், கடந்த மாா்ச் மாதம் சமூக ஊடகத்தில் வந்த ஒரு ஆன்லைன் வா்த்தக முதலீட்டு விளம்பரத்தை பாா்த்து அதில் இருந்த கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் தரப்படும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய காா்த்திக், அந்த நபா் கூறியபடி கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 43 லட்சம் செலுத்தினாா்.
பின்னா், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த காா்த்திக், இதுதொடா்பாக சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டது ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளரான நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த சூா்யா ஸ்ரீனிவாஸ் (50), அவரது நண்பா் மேற்கு சைதாப்பேட்டையைச் சோ்ந்த சேஷாத்ரி எத்திராஜ் (43) இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் சேஷாத்ரி எத்திராஜ், ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வேலையை விட்டு நீக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது.