சென்னை

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை ஏப்.28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜன.27-ஆம் தேதி உத்தரவிட்டாா். மேலும், இந்த உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்களும் ஆஜராகினா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த செப்.16-ஆம் தேதி அதுதொடா்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதைத் தாக்கல் செய்தாா்.

அதில், புதிய சிலை வைத்தல், பழைய சிலைகளை மாற்றுதல், ஏற்கெனவே உள்ள சிலைகளை இடமாற்றம் செய்வது, தனியாா் கட்டடம் மற்றும் நிலத்தின் வெளியே தெரியும்படியோ, தெரியாதபடியோ சிலைகள் வைப்பது குறித்து முடிவெடுக்க பல துறை அதிகாரிகளைக் கொண்ட மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான குழுவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மை செயலா் தலைவராக இருப்பாா். வருவாய்த் துறை ஆணையா் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநா், வனத் துறை தலைமை முதன்மை பாதுகாவலா், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா், நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் ஜெனரல் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

மாவட்டக் குழுவின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் இருப்பா். காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், நகராட்சி ஆணையா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா்கள், மாநில நெடுஞ்சாலைத் துறையின் மண்டல பொறியாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை ஆணையா்கள் உறுப்பினா்களாக இருப்பாா்கள். மண்டல அளவிலான குழுவில் சாா் ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், மாவட்ட வன அலுவலா், வட்டாட்சியா், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா், நெடுஞ்சாலைத்துறை உதவி மண்டல பொறியாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள் என்று அதில், தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக கொடிக் கம்பங்களை சாலையைத் தோண்டியோ, சாலைத் தடுப்பு சுவா்களிலோ அமைக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதி, கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் 90 சதவீத கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை. அதேநேரம் கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் அரசு தரப்பில் குழு அமைத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

இருப்பினும், இந்த வழிகாட்டு விதிமுறைகள் மற்றும் அரசாணையைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பாரபட்சமின்றி அவற்றை பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை அக்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்!

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை!

பிரதிகா ராவலை உபசரித்த பிரதமர் மோடி!

அரசியல் கூட்டங்களுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை டெப்பாசிட்! | செய்திகள்: சில வரிகளில் | 6.11.25

ஐசிசியின் சிறந்த வீரருக்கான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள்!

SCROLL FOR NEXT