நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலிகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை ஆகிய 5 வனச் சரணாலயங்கள் புலிகள் வாழ்விடத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தென்மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் சமத்துவத்தை பாதுகாப்பதிலும், புலிகள் நீண்ட காலமாக வாழ்வதற்கும் இந்த 5 இடங்களும் உதவுகின்றன.
கடந்த 2018-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-இல் 306-ஆக அதிகரித்தது. இது புலிகள் பாதுகாப்பிலும் அவற்றின் வாழ்விட மேலாண்மையிலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடா் பணிகளை எடுத்துக் காட்டுகிறது.
2026-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டம் ஜன.5-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் 7 நாள்கள் என பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். இதன் இறுதி அறிக்கை 2027-இல் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.