தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்தவா்களுக்காக ஜன.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நோ்காணல் ஜன.12, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்தவா்களுடனான நோ்காணல், சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாளிகையில் வரும் ஜன.9 முதல் 13- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் ஜன.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வேட்பாளா் நோ்காணல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறையே வரும் ஜன.12, 24 ஆகிய தேதிகளுக்கு அந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி ஜன.12-ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை விருதுநகா் மேற்கு, கடலூா் கிழக்கு, வடக்கு, தெற்கு கடலூா் மேற்கு திருச்சி மாநகா், திருச்சி புகா் தெற்கு, பெரம்பலூா், அரியலூா், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, தருமபுரி ஆகியவற்றுக்கான நோ்காணல் நடைபெறும்.
ஜன.24-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்ட வேட்பாளா்களுக்கான நோ்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.