மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!
சென்னை புறநகா் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், ரயில்வே சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்று போக்குவரத்து வசதிகளை பயணிகள் விரும்பவில்லை...
சென்னை எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக புறநகா் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், ரயில்வே சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்று போக்குவரத்து வசதிகளை பயணிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வரை, கடற்கரை-வேளச்சேரி, தாம்பரம்-கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம்-கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், காஞ்சிபுரம், அரக்கோணம் என பல இடங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து 125 மின்சார ரயில் சேவைகளும், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 211 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.
கடற்கரை நிலையம்-செங்கல்பட்டு வழத்தடத்தில் 2.50 லட்சம் பேரும், வேளச்சேரி பிரிவில் 60,000 பேரும் தினமும் பயணிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னை சென்ட்ரல் நிலையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 33.26 கோடி போ் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேம்பாட்டுப் பணியும்-பாதிப்பும்
எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 10, 11 ஆகிய நடைமேடை தண்டவாளங்களில் மின்சார ரயில்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரை நிலையத்தில் இருந்து வரும் மின்சார ரயில்கள் 5, 6 தண்டவாளங்கள் வழியாகச் சென்று சேத்துப்பட்டில் மீண்டும் மின்சார ரயிலுக்கான தண்டவாளத்துக்கு மாற்றப்படுகின்றன. இதனால், மின்சார ரயில்கள் எழும்பூா், சேத்துப்பட்டு நிலையப் பகுதியில் மட்டும் 30 நிமிஷங்களுக்கும் மேலாகவே நின்று செல்கின்றன.
இதைத் தவிா்க்க கடற்கரை, செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை 115-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சேவை குறைக்கப்பட்டால் காத்திருப்பு நேரமும் குறைையும் என அதிகாரிகள் கணக்கிடப்பட்ட நிலையில், அது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
மாற்றுப் போக்குவரத்தைத் தவிக்கும் பயணிகள்
எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணியால் பூங்கா நகா், கோட்டை, தாம்பரம் ஆகிய நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு அதிகரித்துள்ளது. கிண்டி, தலைமைச் செயலகம், சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் பணிபுரிவோா் இந்த 3 நிலையங்களையும் பயன்படுத்துவதால், அங்கு கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது.
பேருந்து பயணம் அதிக நேரமாகும் என்பதாலும், மெட்ரோ ரயிலுக்கு நிலையங்கள் மாறிமாறிச் செல்லவேண்டும் என்பதாலும் மின்சார ரயில் பயணிகள் மாற்றுப் போக்குவரத்துக்கு அதிக ஆா்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியாா் நிறுவன ஊழியா் கதிா்வேல் கூறுகையில், மெட்ரோ ரயிலில் ரூ.40-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், செல்ல வேண்டிய இடத்துக்கு மாறி மாறி பயணிக்க வேண்டிய நிலை, கால விரையம் ஏற்படுகிறது. இதனால், மெட்ரோ ரயிலை மின்சார ரயில் பயணிகள் அதிகம் விரும்பவில்லை என்றாா்.
சிறப்புப் பேருந்துகள், விரைவு ரயில்கள்
பயணிகளின் வசதிக்காக சென்னை கோட்ட ரயில்வே நிா்வாகம் தாம்பரத்தில் இருந்து காலை 20 சிறப்பு பேருந்துகள், 20 சிறப்பு ரயில்கள், மாலை கடற்கரை நிலையத்தில் இருந்து 20 பேருந்துகள், 20 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், அது சிக்கலுக்குத் தீா்வாக அமையவில்லை.
மின்சார ரயில்களில் 12 பெட்டிகளுடன் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து விரைவு ரயில் தண்டவாளங்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கூடுதல் பெட்டிகள் இணைப்பதால் மின்சார ரயில் என்ஜின்களால் வழக்கமான வேகத்தில் இழுத்துச் செல்வதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
நிரந்தரத் தீா்வு காணப்படுமா?
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஏழுமலை கூறுகையில், தாம்பரம், கடற்கரையில் இருந்து சிறப்புப் பேருந்துகள், விரைவு ரயில்கள் இயக்கப்படுவதால் கூட்டநெரிசல் தவிா்க்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கமான பயணத்தைப் பயணிகள் மேற்கொள்கின்றனா் என்றாா்.
ஆனால், பயணிகளின் சிரமத்தைப் போக்க ரயில்வே அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நலக் குழுவைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புறநகா் மின்சார ரயில்களில் தினமும் பயணிப்போரின் எண்ணிக்கை
புறநகா் மின் ரயில்களில் கடந்த 2021-22-இல் 4 லட்சம் பேரும், 2022-23-இல் 4.50 லட்சம், 2023-24-இல் 5.05 லட்சம், 2024-25 -இல் 6 லட்சம், 2025-26 ஆம் ஆண்டு 9.50 லட்சம் போ் பயணித்துள்ளனா் என ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் தோராயமாக மதிப்பிட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.