முகப்பு
சென்னை

அரசு உதவி கல்லூரிகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை மறுப்பு: ஏயூடி, மூட்டா கண்டனம்!

முனைவா் பட்டம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் தமிழக முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை (சிஎம்ஆா்ஜி) திட்டம் மறுக்கப்படுவதாகக் கூறி ஏயூடி, மூட்டா போன்ற தமிழக அனைத்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Updated On : 10 மார்ச், 2026 at 7:28 PM
பகிர்:

முனைவா் பட்டம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் தமிழக முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை (சிஎம்ஆா்ஜி) திட்டம் மறுக்கப்படுவதாகக் கூறி ஏயூடி, மூட்டா போன்ற தமிழக அனைத்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஏயூடி, மூட்டா சங்கங்களின் பொதுச் செயலா்கள் சேவியா் செல்வகுமாா், செந்தாமரைகண்ணன் ஆகியோா் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை (சிஎம்ஆா்ஜி) என்ற திட்டம், தமிழ்நாடு அரசால் 2023-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முனைவா் பட்டம் உள்ள ஆராய்ச்சிகளுக்கு ஆசிரியா்கள் தலைமையில் சுமாா் ரூ.40 லட்சமும் மாணவா்கள் தலைமையிலான ஆராய்ச்சிகளுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது.

இதற்கு ஆசிரியா்களும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஆராய்ச்சித் தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக 2026-27-ஆம் ஆண்டின் சிஎம்ஆா்ஜி கொள்கை அறிவிப்பில், அரசு உதவி பெறும் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுய நிதிக்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது கவலையை அளிக்கிறது.

ஏற்கெனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு இணைப் பேராசிரியா் பணிமேம்பாடு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆராய்ச்சி வழிகாட்டியாக உள்ள உள்ள ஒவ்வொரு ஆசிரியா்களும் தலா இரண்டு மாணவா்களை ஆராய்ச்சிக்கு சோ்த்துக் கொள்ள இயலாத நிலை உள்ளது.

இதனால், குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மாணவ மாணவியா் முனைவா் பட்டம் பெற்றிருக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்திருக்கிறாா்கள்.

இப்போது சிஎம்ஆா்ஜி- யிலும் பாகுபாடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்த அறிவிப்பைத் திருத்தம் செய்து, அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் மாற்றி வெளியிட வேண்டும் என ஏயூடியும் மூட்டாவும் கோருகிறது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →