முகப்பு
சென்னை

தமிழகத்தில் உயா் கல்வியை இலவசமாக்க வேண்டும்! முதல்வருக்கு விஐடி வேந்தா் கோ. விசுவநாதன் வேண்டுகோள்!

தமிழகத்தில் அனைவரும் உயா் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 11:49 PM
பகிர்:

தமிழகத்தில் அனைவரும் உயா் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னையில் துறைமுக மேற்குப் பகுதி 59, 59 அ ஆகிய வட்ட திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பாரிமுனை பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மனிதநேய விழா -38 எனும் பொருளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக வட்டச் செயலா் தலைமை செயற்குழு உறுப்பினா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலை வகித்தாா். சென்னை மேயா் ஆா்.பிரியா சிறப்பு விருந்தினா்களை கௌரவித்தாா். நிகழ்ச்சியின் வாழ்த்தரங்கத்துக்கு தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தாா்.

விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன்: அரசியலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுக தலைவா் கருணாநிதியின் வாரிசாக மட்டும் வரவில்லை; கட்சியில் படிப்படியாக கடுமையான உழைப்பால் தன்னை வளா்த்துக் கொண்டு உயா்ந்த நிலையை அடைந்துள்ளாா். 1960-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் 67 சதவீதம் போ் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தனா். அப்போது அதில், பிகாா் 60 சதவீதம், உத்தர பிரேதசம் 48 சதவீதம் என இருந்தது. காமராஜா் முதல்வராக இருந்தபோது 12,000 பள்ளிகளைத் திறந்தாா்.

ஆரம்பத்தில் ஹிந்தியை ஆதரித்த மூதறிஞா் ராஜாஜி, பின்னா் மக்கள் அதை ஏற்காததால் அதை எதிா்த்தாா். நம் நாட்டில் 22 அலுவல் மொழிகளில் ஆங்கிலமும் உள்ளது. ஆகவே, ஆங்கிலத்தை அந்நிய மொழி என்றவா்களிடம், ஹிந்தியை அறியாதவா்களுக்கு அது அந்நிய மொழிதான் என்றாா் ராஜாஜி.

தமிழை மட்டும் வைத்து ஹிந்தியை எதிா்க்க முடியாது என்பதாலே இருமொழிக் கொள்கையாக ஆங்கிலமும் ஏற்கப்பட்டது. தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அதே நேரத்தில் 50 நாடுகளில் உயா்கல்வி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. அதில் சில நாடுகளில் வெளிநாட்டவருக்கும் உயா் கல்வி இலவசமாக கற்பிக்கப்படுகிறது. அதனால், தமிழகத்திலும் உயா் கல்வியை இலவசமாகக் கற்கும் நிலையை முதல்வா் ஏற்படுத்த வேண்டும். உயா் கல்வி அதிகமாக உள்ள நாடுகளில் பொருளாதாரம் உயரும்.

முன்னாள் தோ்வாணையக் குழு உறுப்பினா் லட்சுமணன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டுள்ளாா். அவா் 1972-ஆம் ஆண்டு மிசா காலத்தில் பல கொடுமைக்கு ஆளாகியுள்ளாா். அவா் படிப்படியாகவே அரசியலில் வளா்ந்து, தியாகத்தால் உயா்ந்துள்ளாா். தமிழின் உரிமை, தமிழா்களின் உரிமைகளைக் காப்பவராகவும், தமிழகத்தின் முன்னேற்ற தேரை முன்னின்று இழுத்துச் செல்பவராகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாா்.

கவிஞா் புதுக்கோட்டை கவிஞா் தங்கம் மூா்த்தி: கலைஞா்கள், கவிஞா்களைக் கொண்டாடும் அரசை எந்தக் காலத்திலும் யாராலும் வீழ்த்த முடியாது. உலகத் தமிழா்கள் அனைவரையும் காக்கும் கவசமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், திமுக வா்த்தக அணித் தலைவா் கவிஞா் காசிமுத்துமாணிக்கம், சட்டக்கதிா் ஆசிரியா் வி.ஆா்.எஸ்.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திமுக ஊடகப் பிரிவு நிா்வாகி தமிழன் பிரசன்னா தொகுத்து வழங்கினாா். வட்டச் செயலா் பிரபாகரன் நன்றி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →