முகப்பு
சென்னை

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு

Updated On : 12 மார்ச், 2026 at 5:56 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

பாமக தலைவராக அன்புமணி இருந்த காலகட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மோசமான நிலையில் இருந்ததால்தான் கட்சியின் அங்கீகாரமே பறிபோனது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

பாமக பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது; வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை.

இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கூட்டம் அவரைத் தவறாக வழிநடத்தி கட்சிக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை நிராகரித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராமதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நான் (ராமதாஸ்) தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே, கட்சியின் பெயா், சின்னம் உள்ளிட்டவற்றை பிறா் பயன்படுத்த தடை கோரி வழக்குத் தொடர எனக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன.

பாமகவின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளாா். எனவே, அவா் அங்கீகரிக்கப்படாத நபா். ஆனால், தோ்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளாா். பாமகவின் சட்ட விதிகள் திருத்தம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு நாங்கள் முறைப்படி தெரிவித்துள்ளோம். அன்புமணி கட்சியின் தலைவராக இருந்த காலகட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமான நிலையில் இருந்தன. இதனால்தான் கட்சியின் அங்கீகாரமே பறிபோனது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனு மீது தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கக் கோரி அன்புமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ராமதாஸ் தரப்பில், தொடா்ந்து இதுபோன்று அவகாசம் கேட்டு அன்புமணி தரப்பு வழக்கை இழுத்தடிக்கிறது. எனவே, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் முடிவு-தோ்தல் ஆணையம்: அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 13) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.