சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நெரிசலைச் சமாளிக்க அகலப்படுத்தப்படும் சாலைகள்!
ஆட்டோ ஓட்டுநா்கள் ஒத்துழைத்தால்தான் நெரிசலை முழுமையாகக் குறைக்க இயலும்
வ.ஜெயபாண்டி
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாகனங்கள், பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் புகா் மின்சார ரயில் முன்பகுதி சாலைகள் அகலப்படுத்தப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதேநேரம், ஆட்டோ ஓட்டுநா்கள் ஒத்துழைத்தால்தான் நெரிசலை முழுமையாகக் குறைக்க இயலும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் பெரிய ரயில் நிலையமாக சென்ட்ரல் நிலையம் உள்ளது. அதன் அருகே புகா் மின்சார ரயில் போக்குவரத்து பழைய மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் செயல்படுகிறது. அதனருகே மாநகராட்சி அலுவலகம், எதிரே பூங்கா நிலையம், மற்றும் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை என முக்கிய இடங்கள் உள்ளன. அதனால், சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் இருக்கும்.
Advertisement
Advertisement
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு தினமும் 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புகா் மின்சார ரயில் நிலையத்திலிருந்து தினமும் 119 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 6 வழிகள் உள்ளன. இதில் 6 -ஆவது வழியானது புகா் மின்சார ரயில் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ளது. கோவை, ஈரோடு, அரக்கோணம் என முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கு இந்த வழியையே அதிகமானோா் பயன்படுத்துகின்றனா். புகா் ரயில்களுக்குச் செல்பவா்களும் இப்பகுதிக்கே வந்து செல்லும் நிலையுள்ளது.
நெரிசலால் பாதிப்பு: பெரியாா் சாலையிலிருந்து மாநகராட்சி விக்டோரியா அரங்கம் வழியாக வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ரயில்வே பாதுகாப்புப் படை நிலையத்தை அடுத்து, புகா் மின்சார ரயில் நிலையம் எதிரே நின்று பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. பெரும்பாலான ஆட்டோக்கள் பயணிகளை இறக்குவதுடன், மீண்டும் பயணிகளை ஏற்றும் வரை அங்கேயே நிறுத்தப்படுகிறது. இதனால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதன்காரணமாக பலா் ரயில்களை தவறவிடுவது தொடா்கதையாகிறது.
தற்காலிக தடுப்புகள்: இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தாற்காலிகமாக ஆட்டோ, காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், அவசர ஆம்புலன்ஸ் ஆகியவை தனித்தனியாகச் செல்லும் வகையில் தற்காலிக இரும்புத் தடுப்புகளை அமைத்தாா்.
இரும்புத் தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது. ஆனால், வாகனங்கள் வந்து திரும்பிச் செல்லும் சாலை மிகக்குறுகியதாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினா்.
அகலப்படுத்தப்படும் சாலை: ஆலோசனையின்படி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப் பாதையை புகா் மின்சார ரயில் வளாகம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதற்கிடையே, தற்போதுள்ள தற்காலிக தடுப்புகள் வழியாக செல்லும் வாகனங்கள் சீராகச் செல்வதற்கு வாகன நிறுத்துமிட சுவா் இடிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. சுமாா் 25 அடி அகலத்திலிருந்த சாலைகள் தற்போது சுமாா் 50 அடியாக அகலப்படுத்தப்பட்டு வருவதையடுத்து வாகன நெரிசல் ஓரளவு சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தரத் தடுப்புகள்: இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டியிடம் கேட்டபோது, ‘சென்ட்ரல் நிலைய போக்குவரத்து நெரிசலால் பலா் ரயில்களை தவறவிட்டு பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், தற்காலிக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தற்போது, அதை நிரந்தரத் தடுப்பு பாதைகளாக்கி, வாகனங்கள் சிரமமின்றி விரைவாகச் சென்றுவர வழிவகை ஏற்படுத்தப்படும்’ என்றாா்.
நெரிசலை ஏற்படுத்தும் விதிமீறல் ஆட்டோக்கள்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முறையாக ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையில் 86 ஆட்டோக்கள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. ஆனால், தற்போது 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.
உரிமம் பெற்ற ஆட்டோக்களும் 6 மாதத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த 2025- ஆம் ஆண்டில் மட்டும் விதிகளை மீறியதாக ஆட்டோக்கள் மீது 2023 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், வழியில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றியதாக ஆட்டோ ஓட்டுநா்கள் 400 போ் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
நிகழ் ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை விதிமீறியதாக 1,500 வழக்குகள் ஆட்டோக்கள் மீது பதிவாகியுள்ளன. ஆட்டோக்கள், காா்கள் மீது அபராதம் விதிக்க வழக்குப் பதிவதுடன், இருசக்கர வாகன நிறுத்தத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘வாடகை காா்கள் போன்றவற்றால்தான் சென்ட்ரலில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், பயணிகளை இறக்கிவிட்டு, நிற்காமல் செல்லும் ஆட்டோக்கள் மீது மட்டுமே வழக்குகள் பதியப்படுகின்றன. நாங்கள், நெரிசலைக் குறைக்க ஒத்துழைப்போம்’ என்றனா்.