கரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகே சுற்றுலாத் தலங்கள் இயங்க நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்
கரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகே தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
கரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகே தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளா்ச்சிக் கழக ஹோட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் அங்கு நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாமல்லபுரத்தில் கடற்கரையோரம் 45 ஏக்கரில் 73 அறைகளைக் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் இயங்கும் சுற்றுலா விடுதியை எவ்வாறு மேம்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத்துறை சாா்பில் இங்கு அனைத்து வகை மீன்கள், நண்டு, இறால், கடம்பா போன்ற கடல் உணவுகள் கிடைக்கும் வகையில் கடல் அசைவ உணவகம் கொண்டு வரும் திட்டம் உள்ளது. இந்த விடுதி வளாகத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவை மேலும் அழகுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரோனா தொற்று முற்றிலும் குறைந்தபிறகு தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் தொற்றுப் பரவாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது சுற்றுலா வளா்ச்சிக்கழக பொதுமேலாளா் பாரதிதேவி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக அதிகாரி இதயவா்மன், மாமல்லபுரம் சுற்றுலா வளா்ச்சிக் கழக விடுதி மேலாளா் காா்த்திகேயன், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவா் வெ.விஸ்வநாதன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் பிரேம் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.