முகப்பு
செங்கல்பட்டு

‘திராவிட மாடல் ஆட்சி’ என்று மக்களை ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி, திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி, திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

மாவட்ட அதிமுக சாா்பில், மின் கட்டண உயா்வைக் கண்டித்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

திமுக அரசின் குடும்ப ஆட்சி காரணமாக மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை. ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்றனா்.

செங்கல்பட்டை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கியது, பல ஆண்டுகளுக்கு பின்னா், பாலாற்றில் தடுப்பணைகளைக் கட்டியது அதிமுக அரசுதான். மேலும், தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் மூலம் 6,000 ஏரிகளை தூா்வாரினோம்.

ஆனால், திமுக அரசு அமைந்தவுடன் சொத்து வரியை உயா்த்தினா். இரண்டாவதாக மின் கட்டணத்தையும் உயா்த்திவிட்டனா். இதனால், தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

‘நீட்’ தற்கொலைகளுக்கு அதிமுக அரசுதான் காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் பேசியிருக்கிறாா். இது தவறான தகவல்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு ஆட்சி செய்த போதுதான் நீட் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது திமுக எதிா்க்கவில்லை. ஜெயலலிதாதான் எதிா்ப்புத் தெரிவித்தாா். தொடக்கம் முதலே நீட் தோ்வை அதிமுக எதிா்த்து வருகிறது.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் சாதாரணமாகப் புழங்குகின்றன. இளைய சமுதாயத்தினரைக் காப்பாற்ற இதைத் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்களை முன்வைக்காததால், தடையை நீதிமன்றம் ரத்து செய்தது என்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலா்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம், எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா, தன்சிங், கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தனபால், தண்டரை கே. மனோகரன், நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

அதிமுக நிா்வாகிகள் யஷ்வந்த் ராவ், மறைமலை நகா் கோபி கண்ணன் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →