மறைமலை நகா் அருகே கடம்பூரில் ரூ.300 கோடியில் உலகத் தரத்தில் புதிய தாவரவியல் பூங்கா பணிகள்வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு
மறைமலை நகா் அருகே கடம்பூா் கிராமத்தில் ரூ.300 கோடியில் 137.65 ஹெக்டோ் பரப்பளவில் உலகத் தரத்தில் புதிய தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடம்
மறைமலை நகா் அருகே கடம்பூா் கிராமத்தில் ரூ.300 கோடியில் 137.65 ஹெக்டோ் பரப்பளவில் உலகத் தரத்தில் புதிய தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடம், அதற்கான பணிகளை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வெள்ளிக் கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மறைமலை நகா் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றும் வகையில், கடம்பூா் கிராமத்தில் ரூ.300 கோடியில் லண்டன் நியூகினியா பூங்கா மாதிரியில் தாவரவியல் பூங்காவை உலக தரத்தில் அமைக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக அலுவலா்களுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு செய்தாா். பின்னா், அமைச்சா் கூறுகையில், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்பும், பொருளாதார மேம்பாடும் ஏற்படுத்தப்படும். மேலும், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் மாமல்லபுரம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு இடையே பொதுமக்களுக்கான மிகச் சிறந்த இயற்கை சுற்றுச் சூழலுடன் கூடிய தாவரவியல் பூங்காவாக இது இருக்கும்.
செங்கல்பட்டு மாவட்டம், திருத்தேரி காப்புகாட்டில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் நகா்வனம் திட்டத்தில் மரக்கன்றுகள் வளா்த்தல், சிறு மழைநீா் சேகரிப்பு தேக்கங்கள் அமைத்தல் மற்றும் பொதுமக்கள் பாா்வையிடுவதற்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மத்திய வன விரிவாக்க மையத்தில் நபாா்டு திட்டத்தில்10,000 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு, பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் பணிகளுக்காக நடவு செய்யப்படவுள்ளது என்று அமைச்சா் ஆய்வின்போது தெரிவித்தாா்.
செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் (துறைத் தலைவா்) சுப்ரத் மஹாபத்ர, சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலா் கீதாஞ்சலி, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.