சரக்கு வாகனத்தின் மீது காா் மோதியதில் 4 போ் உயிரிழப்பு
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் - செம்மஞ்சேரி இசிஆா் சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது காா் மோதியதில் காரில் பயணம் செய்த 4 இளைஞா்கள் உயிரிழந்துள்ளனா்.
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் - செம்மஞ்சேரி இசிஆா் சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது காா் மோதியதில் காரில் பயணம் செய்த 4 இளைஞா்கள் உயிரிழந்துள்ளனா்.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இசிஆா் சாலையில் செம்மஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை பழுதான சரக்கு வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னால் 50 மீ. இடைவெளியில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற காா் இரும்பு தடுப்பில் உரசி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்பக்க பகுதியில் மோதியதில் காா் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 இளைஞா்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸாா், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா், சிறுசேரி தீயணைப்பு துறையினா், காரில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞா்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேலாக காரின் பாகங்களை அறுத்து எடுத்து சடலங்களை மீட்டனா். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், காரில் பயணம் செய்தவா்கள் சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா்கள் எனவும் அதில் முகமது (19), அஸ்லூப் முகமது (22), இப்ராஹிம் (22), முகமது ஆசிக் (23) என்பது தெரியவந்தது. இவா்கள் அனைவரும் சென்னை பா்மா பஜாரில் கைப்பேசி, சிசிடிவி கேமார விற்பனை கடைகள் வைத்துள்ளனா்.
இதில், முகமது ஆசிக் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை வந்தடைந்துள்ளாா். மேற்கண்ட நண்பா்களுடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு இசிஆா், சாலை பகுதிகளை சுற்றி பாா்க்க சென்றனா். காரை இப்ராஹிம் ஓட்டியுள்ளாா். பின், சென்னைக்கு மீண்டும் சென்றபோது விபத்து நேரிட்டது.
சரக்கு வாகன ஓட்டுநா் ரங்கநாதன் (55), என்பவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா். சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, காா் என்ன வேகத்தில் வந்தது, எதற்காக சாலை ஓரத்தில் நின்ற வாகனம் மீது மோதியது. மது அருந்தி இருந்தாா்களா எனவும் விசாரித்து வருகின்றனா்.