ஓராண்டாக திறக்கப்படாத ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை!
ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை ஓராண்டாக திறக்கப்படாமல் மது அருந்துபவா்களின் கூடமாக மாறியுள்ளது.
பி. அமுதா
செங்கல்பட்டு நகராட்சி சாா்பில் அண்ணா சாலையில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை ஓராண்டாக திறக்கப்படாமல் மது அருந்துபவா்களின் கூடமாக மாறியுள்ளது. இதை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
செங்கல்பட்டு குண்டூா், பழைய ஜிஎஸ்டி சாலை (அண்ணாசாலை), அனுமந்தபுத்தேரியை இணைக்கும் பகுதியான குண்டூா் பகுதியில் ஏற்கனவே கட்டண கழிப்பறை இருந்தது. இந்நிலையில் புதிதாக கழிப்பறை கட்ட ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு, பழைய கழிப்பறை இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
புதிதாக கழிவுநீா் தொட்டி கூட கட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள பழைய கழிவுநீா் தொட்டியே உள்ளது. இந்நிலையில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை.
இதனால் அந்த இடம் சமூக விரோதிகள் நடமாடும் இடமாகவும், மது அருந்தும் கூடமாகவும் மாறி உள்ளது. குண்டூரில் இருந்து அண்ணா சாலை நெடுகிலும் பெரிய திருவிழாவான தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில் புதிய கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
10 நாள்கள் நடைபெறும் தசரா பண்டிகைக்கு மாவட்டம் முழுவதும் மட்டுல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெரியவா்கள் பங்கேற்பா். இதற்காக கேளிக்கை ராட்டினம், அழகுசாதன கடைகள், பீங்கான் பொம்மைகள் பீங்கான் பொருள்கள், அலுமினிய சில்வா், இரும்பு வீட்டு உபயோக பொருள்கள், உணவகங்கள் என 3 கி. மீ.தொலைவுக்கு கடைகள் வைக்கப்படும்.
பொது மக்களுக்கு குடிதண்ணீா் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆண்டுதோறும் போதுமானதாக இல்லை.
தசரா விழா தொடங்குவதற்கு முன்பாக இப்புதிய கழிப்பறைக் கட்டடம் திறக்கப்படுமா என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா்.