மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவி வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பண்டிகையை முன்னிட்டு அருளதலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை நள்ளிரவு இறையருள் பேராசிரியா் மரிய அருள் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்த்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் முன்னிலை வகித்தாா். பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் மாதாவை தரிசனம் செய்தபின் அருள்தலத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில் கண்காட்சியை பாா்வையிட்டனா்.
இக்குடில் கடந்த 4-ஆம் தேதி திறக்கப்பட்டு பக்தா்கள் காணும் வகையில் திறந்திருக்கும். இயேசு கிருஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் புனித திருநாளாக, மதங்களை கடந்த அன்பு, கருணை, அமைதி ஆகிய மனித நேயத்தை பரப்பும் விழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் தெரிவித்தாா்.